வியாழன், 12 நவம்பர், 2009

சிறுதாவூரில் மெத்தனம் காட்டுவது யார்? - முதலமைச்சருக்கு சிபிஎம் கேள்வி

காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டு, நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கும் வகையில், நிலமீட்புப் போராட்டத்தை நடத்தப் போவதாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசும் காவல்துறையும் தீவிரமாக இயங்கின. இப்போராட்டத்தை முதல்வர் கருணாநிதியும் தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார்.

அதற்குப் பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் (9.11.2009) அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

காவேரிராஜபுரத்தில் நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமிப்பில் இருந்த அரசுப் புறம்போக்கு நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கும் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் கரு ணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதாவூர் நிலம் பற்றி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் அவசரம் காட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளது, எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.

“தற்போது” என்று முதலமைச்சர் கூறியுள்ளது அஇஅதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்ட பின்னணியைக் குறிப்பதாக உள்ளது. அவ்வாறு உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றிருந்த போதே திமுக தரப்பில் சிறுதாகூர் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு எவ்வித மாற்றமும் இன்றித் தொடர் கிறது” என்று தெளிவுபடுத்தப் பட்டது. அதே காலகட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பான விசா ரணை ஆணையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி சாட்சியம் அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மூலமான வாதங்களும் முன்வைக்கப்பட்டு விட்டன.

இப்பிரச்சனையில் இறுதி அறிக்கை தர வேண்டிய விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி சிவசுப்பிரமணியன், வேறொரு விசார ணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் சிறுதாவூர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அவசரம் காட்டாததால் அல்ல.

மேற்குவங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படக்கூடாது என்றும் முதல மைச்சர் கூறியுள்ளார். நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட் டுள்ளது என்பதை, மண்டல் கமிஷன் அறிக்கையே பதிவு செய்துள்ளதையும், தமிழ்நாட்டில் நிலச்சீர்திருத்தச் சட்டம், மறைந்த அண்ணா அவர்களாலேயே ‘உச்சவரம்பா, மிச்ச வரம்பா’ என்று ஏகடியம் பேசப்பட்ட நிலைமாற வில்லை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.

காவேரிராஜபுரத்தைப் பொறுத்தவரை, நீதிபதி தினகரன் தரப் பிலேயே ஆக்கிரமிப்பு வேலிகள் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அந்நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நீதிமன் றத் தடை யாணை ஏதுமற்ற பின்னணியில், தமிழக அரசு மெத்தனம் காட்டக் கூடாது என்பதற்காக அமைதியான முறையில் நீலமீட்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பை நல்கும். நிலமீட்பு போராட்டத்தை சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையாக சித்தரிக்க முதலமைச்சர் முற்பட வேண்டாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு என்.வரதராஜன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.