வியாழன், 19 நவம்பர், 2009

உத்தப்புரம் பிரச்சனை: ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

உத்தப்புரம் பிரச்சனை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை (16.11.09) அன்று உத்தரவிட்டது.

உத்தப்புரம் தலித் மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் குறித்தும், தாக்குதலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணம், தவறிழைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை உத்தப்புரத்திலும் தமிழகத்தின் மற்ற அடையாளங் காணப்பட்ட வன்கொடுமை நடக்கும் இடங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இவரது மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து விசா ரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணை நீதிபதிகள் அளித்த அறிக்கையின்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் உத்தப்புரம் குறித்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி உத்தப்புரத் தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.