செவ்வாய், 20 ஏப்ரல், 2010

அருந்ததியர் உள்ஒதுக்கீடு: ஆணையத் துணைத் தலைவர் கருத்து ஏற்கத்தக்கதல்ல! -பி.சம்பத்

சாதியமைப்பு என்ற ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக இருப்பவர்கள் அருந்ததிய மக்கள். பார்ப்பனருக்கு மேல் சாதியில்லை, சக்கிலியருக்கு கீழ் சாதியுமில்லை என்பது பழமொழி. மலம் அள்ளுவது, பாதாளச் சாக்கடைப் பணி உள்ளிட்ட இழிவானத் தொழில்களை காலம் காலமாக ஆதிக்க சக்திகள் இவர்கள் தலையில் சுமத்தி விட்டார்கள். தமிழகத்தின் மேற்குமாவட்டங்களில் நிலமோ, இதர எந்த உடைமையோ இல்லாத விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளர்களாகவும் இவர்கள் வாழ்கிறார்கள்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் 10 ஓ 8 அடி குடிசைகளில் தந்தை, தாய், 4 மகன்கள், மருமகள், 2 பேரக் குழந்தைகள் உள்பட 9 பேர் கொண்ட குடும்பம் வாழும் நிலை கண்டறியப்பட்டது. ஒன்றல்ல; பல்லாயிரம் அருந்ததியர் குடும்பங்கள் தமிழகத்தில் இத்தகைய வருந்தத்தக்க நிலையில் வாழ்கின்றனர்.

இவர்களின் சமூகப் பொருளாதார நிலை காரணமாக கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவை அருந்ததியர் குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளன. இவர்களையும் இதர தலித் மாணவர்கள், இளைஞர்களையும் கல்வி - வேலைவாய்ப்பில் கைதூக்கி விடுவதற்காக தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இணைந்து கல்வி - வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை கோவை மாநகரில் உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. இதர தொழிற்சங்க இயக்கங்களின் உதவியோடு தமிழகத்தின் பல நகரங்களில் இத்தகைய மையங்களை உருவாக்கும் முயற்சிகளில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இறங்கியுள்ளது.

மிக மிக இழிவான நிலையில் அருந்ததியர் மக்களின் வாழ்க்கை தள்ளப்பட்டுள்ளதால் தலித் மக்களின் பொது இடஒதுக்கீட்டில் இவர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்கவில்லை.

கல்வி - வேலைவாய்ப்பின் பல தளங்களில் இவர்கள் இல்லவே இல்லை. சில துறைகளில் இவர்களின் மக்கள்தொகையை விட மிகச் சொற்பமாகவே, அதாவது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இவர்களின் பிரதிநிதித்துவம் உள்ளது. இப்பின்னணியிலேயே இவர்களின் உள்ஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. அருந்ததியர் அமைப்புகள் பலவும் இதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்துள்ளன.

இப்போராட்டங்கள் ஆளும் வர்க்கங்களாலும் ஆதிக்க சக்திகளாலும் கண்டு கொள்ளப்படவேயில்லை. இதைப் பரிசீலித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 3 ஆண்டுகளாக மாநாடுகள், பேரணி, மறியல், தர்ணா போன்ற பல கட்ட இயக்கங்களை நடத்தின. தமிழ்நாடு அரசும் இதன் நியாயத்தை ஏற்றுக் கொண்டு, பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு, சட்டப்பூர்வமான வழிமுறைகளை கையாண்டு, வெற்றிகரமாக அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தை சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியோடு நிறைவேற்றியது.

இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர், அருந் ததிய மக்களின் சமூகப் பொருளாதார வாழ் நிலைகளையும் தமிழக அரசு மேற் கொண்ட சட்டப்பூர்வமான வழிமுறைகளையும் அறிந்து கொள்ளாமல் அல்லது புரியவும் முயற்சிக்காமல் “வாய் புளித்ததோ - மாங்காய் புளித்ததோ” என்பதைப் போல, அருந்ததியர் மக்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்திற்கு மாறானது என அங்கலாய்த் திருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்தல்ல.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் சட்டப்பூர்வமாக தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி தமிழக முதல்வர் அளித்துள்ள விரிவான விளக்கம் ஆணையத்தின் துணைத்தலைவர் கூற்றுக்கு சரியான பதிலாகும். இதனை முழு மனதோடு வரவேற்கிறோம்.

இந்தியா முழுவதும் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்தாடுவது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்படுவதும், இழிவுபடுத்தப்படுவதும், தலித் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவதும், நிலமோ இதர பொருளாதார உரிமைகளோ இன்றி பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு வேறு எந்த பிரி வினரையும் விட அதிகமாக ஆட்படுவதும் அனைவரும் அறிந்த அன்றாட நிகழ்ச்சிகளாகும்.

ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களின் தேசிய துணைத் தலைவரான என்.எம்.காம்ப்ளேக்கு இது எப்படித் தெரியாமல் போயிற்று என நமக்கு விளங்கவேயில்லை.

எனவேதான் 18.02.2010ல் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீண்டாமை இந்தியா முழுவதும் சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள் செயல்படுவதன் தேவை என்ன என்ற விநோதமான கேள்வியை எழுப்பினார். இவரது கூற்று பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம், ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டதாகவும் அவற்றில் பல இதுவரை ஆணையத்தால் கண்டு கொள்ளப்படவில்லை என்றும் 18.02.2010ல் நடந்த கூட்டத்தில் பலரால் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எந்த பதிலையும் இவர் தெரிவிக்கவில்லை.

ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கு முன்னதாக இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களின் அவல நிலைமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும், தமிழ் நாட்டில் அருந்ததியர் மக்களின் அவல நிலையையும் அதனை மாற்றுவதற்கு தமிழக அரசும், இதர அமைப்புகளும் எடுத்துக்கொண்ட சட்டப்பூர்வமான முயற்சிகளையும் அறிய முயற்சித்து ஆழ்ந்த ஞானத்துடன் கருத்துச் சொல்வதே தேசிய ஆணையத்தின் உபதலைவர் போன்ற பொறுப்புமிக்க பதவி வகிப்பவருக்கு பெருமையளிப்பதாக இருக்கும். அவ்வாறில்லாமல் அரைகுறை விபரங்களுடன் கருத்து தெரிவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மிகவும் ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கும் நியாயம் வழங்க உதவிகரமாக இருக்காது என்பதை தேசிய ஆணையத்திற்கு வலியுறுத்த விரும்புகிறோம்.