செவ்வாய், 17 நவம்பர், 2009

போராட்டம் வெற்றி.... வேலூர் குறவன், குரும்பன்ஸ் மக்களுக்கு சாதிச் சான்றிதழ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் அயராத போராட்டத்தைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் குறவன் மற்றும் குரும்பன்ஸ் இன மக்களுக்கு ஒரு மாதத்திற்குள் சாதிச் சான்றிதழ் வழங்குவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இக்கோரிக்கைக்காக சனிக்கிழமையன்று (14.11.2009) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்மை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.

கடந்த 4-ம் தேதி இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் நடைபெற்றது. பின்னர், மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்தபோது, ஆட்சியர் அவர்களைஅவமானப்படுத்தினார்.

ஆட்சியரின் இத்தகைய செயலை கண்டித்து வெள்ளியன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் தலைவர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், ஒரு மாதத்திற்குள் குறவன், குரும்பன்ஸ் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்தார். மேலும், பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லை என்றும், கம்யூனிஸ்ட் கட்சியை தாம் மிகவும் மதிப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.