சனி, 7 நவம்பர், 2009

செட்டிபுலம் சாதி வெறியர்களின் முன்ஜாமீன் மனுவை ஏற்கக் கூடாது

சென்னை, நவ. 4 -
செட்டிப்புலத்தில் தலித் மக்களுக்கு எதிராகவும், அரசு நிர்வாகத்திற்கு எதிராகவும் வன்முறை வெறியாட்டம் நடத்தியோரை தண்டனையிலிருந்து தப்பவிடக் கூடாது என்றும், அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக் கூடாது என்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூறியது.

இதுதொடர்பாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 3-ம் தேதி மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

செட்டிப்புலம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் தலித் மக்களை 70 ஆண்டுகளுக்கும் மேலாக நுழைய விடாமல், அங்குள்ள சாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்து வந்தனர். இந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்துவதென தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தது.

அதன்படி நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.மாரிமுத்து, முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ஆகியோர் தலைமையில் தலித் மக்கள் கோயில் நுழைவுக்காக சென்ற போது, சாதி ஆதிக்க வெறியர்கள் கோயிலின் கதவை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சாதி வெறியர்கள் போட்ட பூட்டிற்கு சீல் வைத்தனர்.

மேலும், கோயில் நுழைவு தொடர்பாக அக்டோபர் 10-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர். அதில், தலித் மக்கள் கோயிலுக்குள் செல்வதை எதிர்க்க மாட்டோம் என்று சாதி ஆதிக்க வெறியர்கள் ஒப்புக்கொள்ளவே, வி.மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் அக்டோபர் 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

குறித்தபடி 14-ம் தேதி தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல மாரிமுத்து எம்எல்ஏ தலைமையில் ஊர்வலமாக வந்த போது, பெருங்கூட்டமாக எதிரே வந்த கலகக்காரர்கள், பிரச்சனையில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோட்டாட்சியரே தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்வதென முடிவுசெய்து, அதன்படி தலித் மக்களை அழைத்துச் சென்றபோது, திடீரென 300-க்கும் மேற்பட்ட சாதி ஆதிக்க வெறியர்கள், அதிகாரிகள், தலித் மக்கள் மற்றும் போலீசார் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகள், கற்கள் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கினர். இதில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கோட்டாட்சியரின் வாகன ஓட்டுநர் பலத்த காயம் அடைந்தார். போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் அளவிற்கு நிலைமை போனது.

இந்த வன்முறை தொடர்பாக பெயர் தெரிந்த 15 பேர் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் மீது, கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 147, 148, 188, 324, 341, 332, 153(ய)(ஐஐ) மற்றும் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் பிரிவு 3(ஐ) அத்துடன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(ஐ)(ஓஐ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே வழக்கில் தொடர்புடையோரில் சந்தோசம், ஜெயபால், பால்ராஜ், முருகானந்தம், மகேந்திரன், ஜெகதீசன், சிவகுமார், கந்தசாமி, செல்வராஜ், நாகராஜ் ஆகிய 10 பேர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 482-ன் கீழ் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்தில் சரணடையும் அன்றே தங்களின் மனுவை கருணையோடு பரிசீலித்து ஜாமீன் வழங்குவது தொடர்பாக அன்றே தீர்ப்பு வழங்க தஞ்சாவூர் முதன்மை அமர்பு நீதிபதிக்கு (தனி நீதிமன்றம்) உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

அக்டோபர் 26-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த மனு மீது நவம்பர் 3-ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெற்றது. நீதிபதி சி.டி.செல்வம் மனுவை விசாரித்தார்.

அப்போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்டுள்ளோரின் மனுக்கள் நிலை நிற்கத்தக்கதல்ல என்றும்; அவை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரோதமானது; எனவே அவற்றை ஏற்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கில் தனது தரப்பையும் கேட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று சம்பத் குறிப்பிட்டிருந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி வாதாடினார்.

அதைத்தொடர்ந்து இவ்வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக கூறிய நீதிபதி, வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வி.கோபிநாத், நீதிமன்றத்திற்கு உதவுமாறும் உத்தரவிட்டார்.