புதன், 18 நவம்பர், 2009

காட்டுக்கீரை பறித்த தலித் பெண்கள் மீது தாக்குதல்


கோவை துடியலூர் அருகே உள்ளது பன்னிமடை ஊராட்சி. இங்குள்ள கொண்டல்சாமி நகரில் கவிதா, துளசிமணி, தெய்வானை ஆகியோர் வசித்து வருகின்றனர்.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வந்ததால் செங்கல் சூளைகள் இயங்கவில்லை. இதனால் அவர்களுக்கும் வேலையில்லை.

எனவே திங்களன்று (16.11.09) மாலை உணவுக்காக காட்டுக்கீரை பறிக்கச் சென்றனர். அவர்கள் கீரை பறித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள வாழைத் தோட்டத்தின் உரிமையாளர் கோபால் (எ) ராஜகோபால் அவர்களது சாதியைக் குறித்து இழிவாகப் பேசியதுடன் கையில் வைத்திருந்த தடியால் மூன்று பேரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த தலித் பெண்கள் மூவரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக கவிதா துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில், போலீசார் முதலில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தகவலறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட நிர்வாகி வி.பெருமாள் தலையிட்டு பேசியதையடுத்து வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கொங்குநாடு
இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜகோபாலுக்கு ஆதரவாக கொங்குநாடு முன்னேற்றப் பேரவையினர் வியாழனன்று இரவு துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தோட்டத்தில் பெண்கள் காய்கறி, கீரை மற்றும் பழங்களைத் திருடியதாகப் புகார் அளித்துள்ளனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆறுதல்
இந்நிலையில் வெள்ளியன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். முகாம் மருத்துவரை அணுகி அவர்கள் சிகிச்சை விபரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட அமைப்பாளர் யு.கே.சிவஞானம் தெரிவித்ததாவது:

“தலித் பெண்களை ஆதிக்க வெறியோடு தாக்கிய ராஜகோபாலை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடும்’’ என்றார்.

சந்திப்பின் போது அமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் வி.பெருமாள், என்.ஜாகீர், மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியச் செயலாளர் ஆர்.கேசவமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.