மத்தியில் ஆளும் ஐ.மு.கூட்டணி அரசு கல்வித் துறையில் மெல்ல மெல்ல சமூக நீதியைக் கைகழுவிவிட திட்டமிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் ஒவ்வொரு பேட்டியும் ஒவ்வொரு செயலும் அதை நோக்கித்தான் அமைந்துள்ளன.
சமீபத்தில் ஐஐடி படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத பனிரெண்டாம் வகுப்பில் 60 சதம் மதிப் பெண் என்பதற்கு பதிலாக, இனிமேல் 80 சதம் என்று ஆக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தது. இதையொட்டி எதிர்ப்பு கிளம்பியதும் செய்தி ஆதாரமற்றது என்கிறார் அமைச்சர். ஆனால், அடுத்த வரியிலேயே இதைப்பற்றி ஐஐடி கவுன் சில்தான் இறுதி முடிவெடுக்கும். அதற்கான அதிகாரம் அவர்களுக்குத்தான் உண்டு என நழுவுகிறார். இதன் பொருள் ரகசியமானதல்ல. நிச் சயமாக வெகு விரைவில் 80 சதம் மதிப்பெண் என்பதை ஐஐடி கவுன்சில் அறிவிக்கும். அதில் தனக்கு சம்பந்தம் இல்லையென இப்போதே கூறி, சமூக நீதிக்கு சவக்குழி தோண்ட மண் வெட்டி கொடுத்து உதவுகிறார் கபில் சிபல்.
பத்தாம் வகுப்புக்கு தேர்வு கிடையாது என அறிவித்தபோதே குழப்பத்திற்கு அடிகோலப் பட்டுவிட்டது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்த்தும் அதனை மத் திய பள்ளிகளில் அமலாக்க முயல்வதும், மாநி லங்களின் எதிர்ப்பை மீறி கல்வியை படிப்படி யாக மத்திய பட்டியலுக்கே கொண்டு போக கபில் சிபல் முயல்வதும் சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் எதிரான முயற்சியே. இந்தியா, வர்க்கரீதியாகவும், சாதிரீதியாகவும் பிளவுண்டு கிடக்கிற சமூகம். இங்கே தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவனுக்கோ ஏழை எளிய மாணவனுக்கோ உரிய அங்கீகார மும், உரிய மதிப்பும் கிடைப்பதில்லை என்பது உள்ளங்கை புண் ஆகும். இதைப் பார்க்க கண் ணாடி தேவையில்லை.
தகுதியும் திறமையும் ஒரு குறிப்பிட்ட சமூகத் திற்கோ மேல்தட்டு மக்களுக்கோ சொந்தமல்ல. உண்மையிலேயே மிகவும் அறிவுபூர்வமான மாணவர்கள், அவர்களின் சமூகச்சூழல் காரணமாக தங்கள் திறமையை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாமல் உள்ளனர். இதனால் அவர்களின் உண்மையான தகுதிக்கு உரிய மதிப்பெண் வெறும் மொழியால் தீர்மானிக்கப் பட்டு மறுக்கப்படுகிறது.
அடித்தட்டில் இருக்கிற மக்களை கை தூக்கி விட சமூக நீதி பார்வை அவசியம். சமூக நீதியில் லாமல் இந்தியாவில் சம நீதி சாத்தியமில்லை. இதனை மேல்சாதி வெறி கொண்ட பாஜக ஒப்புக்கொள்வதில்லை. மண்டல் கமிஷனுக்கு எதிராக அவர்கள் நடத்திய கலவரமே இதற்கு சாட்சி. கபில் சிபலோ மென்மையான வார்த்தை களைப் பேசி ரொம்பவும் நுட்பமாக வாதாடி, நல்லது செய்வதுபோல் காட்டி சமூக நீதியை சத்தமில்லாமல் சாகடிக்கிறார்.
ஐஐடி நுழைவுத்தேர்வு சம்பந்தமாக தற்போது அப்படி திட்டம் எதுவும் இல்லை என்று கை விரித்தாலும், பொறுப்பை ஐஐடி கவுன்சிலிடமே ஒப்படைத்துவிட்டு அரசுக்கு எந்த பங்குமில்லை என்று சொல்வது திட்டமிட்ட நாடகமே.
ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்க ளுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்களித் திருப்பதும், ஐஐடியில் இட ஒதுக்கீடு கிட்டத் தட்ட கைவிடப்பட்டிருப்பதும் கண்கூடு. இந் நிலையில் அமைச்சரின் பேச்சும் செயலும் நம்பத்தகுந்ததாக இல்லை. சமூக நீதிக்கு குரல் கொடுப்பதாக மார்தட்டும் திமுக, தங்கள் கூட்டணி அமைச்சரின் செயலுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறது?