பின்னடைவு பணி யிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை அனைத்து அரசுத்துறைகளிலும் அமல்படுத்த வலியுறுத்தி திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ மேலும் பேசியதாவது:
அருந்ததியருக்கான உள்இடஒதுக்கீடு அரசாணை வெளியிட்ட பின்னரும் பல துறைகளில் இன்னும் அருந் ததியருக்கான உள்இடஒதுக்கீடு அமலாக்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் நடந்த போது ஒதுக்கீடு வழங்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மாநில அரசுகள் சட்டத்தை போடுவதுடன் அதை முறையாக அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு எந்த துறையிலும் முறையாக அமலாக்கப்பட வில்லை. சமீபத்தில் தமிழகத்தில் உள்ள 71 துறைகளில் மட்டும் ஆய்வு செய்தபோது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பின்னடைவு பணியிடங்கள் 21 ஆயிரம் என கண்டறியப்பட்டது.
மீதமிருக்கக் கூடிய துறைகளில் ஆய்வு செய்தால் 50 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட கூடிய சமூக அநீதி. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மட்டும் 7ஆயிரத்து இருநூறு பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதுபோன்ற பின்னடைவு பணியிடங்களை முழுமையாக நிரப்பும் போதுதான் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், அருந்ததியர்களுக்கும் சமூக நீதி வழங்கப்பட்டதாக அர்த்தம்.
இவ்வாறு எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ பேசினார்.
புதன், 24 மார்ச், 2010
பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் தலித் மக்களுக்கு தமிழக அரசு அநீதி! - எஸ்.கே.மகேந்திரன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
லேபிள்கள்:
எஸ்.கே.மகேந்திரன்,
குற்றச்சாட்டு,
திருச்சி,
பின்னடைவுப் பணியிடங்கள்