தமிழகத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டக்காச்சியேந்தல் கிராம ஊராட்சிகளுக்கு இடதுசாரிகளின் தொடர் முயற்சி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதியின் உரிய தலையீடுகள் காரணமாக வெற்றிகரமாக தேர்தல் நடைபெற்று தலித் தலைவர்கள் அங்கு பொறுப்பிலே உள்ளனர்.
குறிப்பாக இந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தினர்.
வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் 13.11.2006 அன்று தமிழக முதல்வர் தலைமையில் சமத்துவப் பெருவிழா நடைபெற்றது.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகளிலிருந்து அரசின் எந்த ஒரு நலத்திட்டப்பணியும் தொய்வின்றி நடைபெற வேண்டும் என தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் இன்றைக்கு கீரிப்பட்டி ஊராட்சியில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு பணிகளுக்கு நிர்வாக ஒத்துழைப்பு இல்லை என கவலை தெரிவிக்கிறார் ஊராட்சித் தலைவர் பாலுச்சாமி.
இதுகுறித்து பல்வேறு விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ள பாலுச்சாமி, 2008-2009ம் ஆண்டில் தாம் கையெழுத்திட்டு 80 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்திட்டத்திற்கு பரிந்துரை செய்ததாகவும், அதில் ஒருவருக்குக் கூட இன்று வரை உதவித்தொகை கிடைக்கவில்லை என்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது:
தலித்மக்கள் வசிக்கும் தெருவிற்கு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டித்தர வேண்டுமென மாவட்ட ஆட்சியராக இருந்த ஜவஹரிடம் வலியுறுத்தியும், அது இன்றும் நிறைவேறவில்லை; இங்கு அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் மணமகன், மணமகள் அறைகள் இல்லாமல் வெறுமனே விடப்பட்டுள்ளது; சமையல் அறை இல்லை; மழையின் போது நனைந்து கொண்டே சமைக்கும் அவலம் உள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் கழிப்பறை ஒன்று 2006-2007ம் ஆண்டு கட்டிக்கொடுக்கப்பட்டது. இன்று வரை அது பூட்டப்பட்டே உள்ளது. இதற்கு மின்வசதி செய்து தரவில்லை. ரேசன் கடைக்கு மின் வசதி செய்துதரவில்லை. புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்திற்கும் மின்வசதி செய்துதரவில்லை.
அண்ணா மறு மலர்ச்சி திட்டப்பணிகள் சம்பந்தமாக ஊராட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் கலந்தாலோசிப்பதில்லை. வேலை முடிந்த பிறகு, அந்த வேலை நடந்துள்ளது, இந்த வேலை நடந்துள்ளது என்கிறார்கள். இலவச கேஸ் அடுப்பு எத்தனை பயனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்று, லெட்டர் பேடில் எழுதிக் கொடுங்கள் போதும் என்றார்கள். கிட்டத்தட்ட 700 பயனாளிகளுக்கு வழங்க வேண்டுமென எழுதிக் கொடுத்தேன்; இன்னும் கேஸ் அடுப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு பாலுச்சாமி தனது குமுறலை அடுக்கிக் கொண்டே போனார்.