“இப்போ என்ன கெட்டா போச்சு, காசு கப்புத் தந்தாத்தானே கத நடக்கும். சும்மா வெறுங்கையிலேயே முழம் போட முடியுமா, என்ன? ஒன்னும் கவலப்படாதீங்க, உங்க பட்டா ஒன்னும் அழுகிப் போயிறாது” என்று ஓர் உடன்பிறப்பு உபதேசித்திருக்கிறார் கோவை இருகூரில். தலைமுறை கடந்த போராட்டம் என்றாலும் தளராத நம்பிக்கையோடு பட்டாக்களை கையில் வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் பாமர தலித் மக்கள்.
ஆம். இடத்தைக் கண்டுபிடிக்கப் போராட்டம், அதைக் கையகப்படுத்த போராட்டம், அதை மனைப்பட்
டாக்களாகப் பெறப் போராட்டம் என்று 1984 முதல் போராடி, ஒரு வழியாக 2002ம் ஆண்டில் 294 பட்டாக்
களைப் பெற்றிருக்கிறார்கள் இருகூர் தலித்மக்கள். அதன் பின்னர் எட்டு ஆண்டுகளாக ‘என் பட்டாவுக்கான இடம் எங்கே?’ என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். இதற்கிடையில் திருப்பூர் வருவாய் மாவட்டம், கோவை வருவாய் மாவட்டமாகி, பல்லடம் தாலுகாவை சூலூருக்கும் மாற்றியாகி விட்டது. மாதம் ஒரு தாசில்தார், வருடம் ஒரு கலெக்டரிடம் மனு, இடையில் வழக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்று அல்லாடிக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தே.செந்தில்ராஜ் கூறுகிறார்.
இருகூர் ஈஸ்வரன் கோயில் மானிய பூமியை கோவில் குருக்கள் ராமானுஜ ஐயரும் அவரது சகோதரர்களும் தான் அனுபவித்து வருகிறார்கள் என்று 1984ல் அறிந்தோம். அதனை வீடில்லாத ஏழை தலித் மக்களுக்கு வழங்குன்னு அரசிடம் கோரிக்கை வச்சோம். மானிய பூமி அரிஜன நத்தமா வகை மாற்றமாச்சு, அறநிலையத் துறையிலிருந்து ஆதிதிராவிடர் நலத்துறைக்கு மாற்றமாச்சு, 4(1) அறிவிக்கை வெளியிட்டு நிலத்தையும் எடுத்தாச்சு. அப்போ ராமானுஜ ஐயர் கோர்ட்டுக்குப் போனார், அரசாங்கத்துக்கே சாதகமாகத் தீர்ப்பாச்சு. ஆனால் ஆட்சி மாறுனதால 1994ல் இருந்த பட்டியல மாத்திட்டு, 1996ல் புதுப்பட்டியில் போட்டாங்க அதிமுக காரங்க. 2002ல திமுக ஆட்சியல இன்னொரு மனைப்பட்டா குடுத்தாங்க. அரிஜன சேவா சங்கம் மூலமா போட்ட கேசுல 15 பேரை சேர்த்துக்கனும்னு உயர்நீதிமன்றமும் சொல்லியிருக்கு. ஆனா அரசு அதிகாரிங்க காலதாமதப்படுத்திட்டே இருந்ததால ‘1994 பட்டியல ஒத்துக்கணும்னு’ அதிமுக பிரமுகர் பழனிச்சாமி கேஸ் போட, அதையே காரணமா வச்சு, எட்டு வருசமா இடத்த அளந்து தர மாட்றாங்க. மொத்தம் 8.5 ஏக்கரா பூமி ஒன்னத்துக்கும் உதவாம இருக்கு. கருவேல மரந்தான் தோப்பா வளர்ந்திருக்கு என்று ஆவேசமாய் வெடிக்கிறார் செந்தில்ராஜ்.
ஆதிதிராவிடர், பள்ளர், பறையர், வள்ளுவர், அருந்ததியர் என 294 மனைப் பட்டாக்கள் பெற்ற தலித் மக்கள் இன்னும் பலர் வாடகை வீடுகளிலேயே வசிக்கிறார்கள். இதனிடையே 1984ல் கோரிக்கை வைத்த போது இருந்த எண்ணிக்கையை விட இந்த 26 ஆண்டுகளில் இன்னுமொரு பங்கு பட்டா கோரிக்கை வேறு எழுந்துள்ளது. பல்லடம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ‘வழக்கில் தடையாணை ஏதுமில்லை என்பதால் பட்டாதாரர் குடியேறத் தடையேதுமில்லை’ என்று பதிலளிக்கிறார். கோவை ஆதிதிராவிடர் நலத்துறை வெங்கடேஷ் சமீபத்தில் அளித்துள்ள பதிலில், ‘பழனிச்சாமி என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்தான் நில அளவை செய்ய முடியும்’ என்கிறார். ஆனால் பட்டாக்களைப் பெற்ற மக்களுக்கோ சொந்தமாய் ஒரு குடிசை அமைக்கும் கனவுகூட கைகூடவில்லை.
இதனிடையே இப்பிரச்சனையைத் தீவிரமாக கையிலெடுத்து களமிறங்கியுள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. முதற்கட்டமாக மக்களைச் சந்தித்து, பின்னர் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் பு.உமாநாத்திடம் அளித்து பேசியுள்ளனர். அவர்களிடம், பிரச்சனையை விசாரித்து ஒரு வாரத்தில் பதிலளிப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார். உறுதியான நடவடிக்கை ஏதுமில்லாத பட்சத்தில் தீவிரமாக களமிறங்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்துள்ளது.
பட்டா வைத்துள்ள மாகாளியம்மன் கோவில் வீதி ராதிகா மற்றும் மதுரை வீரன் கோவில் வீதியில் சிலரைச் சந்தித்த போது, கைக்கெட்டிய பட்டா கவைக்கு உதவாத கையறு நிலையை ஆதங்கத்தோடு தெரிவித்தனர். எது எப்படியிருந்தாலும் பல்லாயிரம் பேருக்கு பட்டாக்கள் அளித்ததாகக் கூறும் அரசு, வழங்கிய பட்டாக்களின் நிலை என்ன என்பதையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாளில் ‘சர்க்கரை’ என்று எழுதி விட்டாலே இனித்து விடும் என்ற போக்கில் நடந்து கொள்வது ஏழைகளுக்கு நீதி வழங்குவது ஆகாது. (ந.நி)