அனுபவ நிலத்திற்கு பட்டா - மனைப்பட்டா உள்ளிட்ட கோரிக்கை களை வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மார்ச் முதல் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடத்த உள்ள மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் பங்கேற்பது என சங்கத்தின் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இம்மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களை ஈடுபடச் செய்திட முயற்சிகளை மேற்கொள்வதென சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் எஸ்.பழனிச்சாமி தலைமையில் அரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாநில துணைத் தலைவர் பி.டில்லிபாபு எம்.எல்.ஏ, மாநிலப் பொருளாளர் எம்.அழகேசன் உட்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மலைப் பகுதிகளில் பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை 1168-ஐ ரத்து செய்து பட்டா வழங்க வேண்டும்; வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; ஆதிவாசி மக்களுக்கு நில உரிமையும் - வன உரிமையும் வழங்க வகை செய்யும் வன உரிமைச் சட்டம் 2006-ஐ நடைமுறைப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் இச் சட்டத்தின் கீழ் பட்டா கொடுக்க விதித்துள்ள தடை உத்தரவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மலையடிவாழ் பகுதிகளில் வனவிலங்குகளால் வேளாண் உற்பத்தி அழிக்கப்படுவதும், மனித உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வரும் நிலையில், இத்தகைய பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதிலும் அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கின்றனர்; வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை உணவுப் பயிர்களில் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
குறுமன்ஸ் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் நீடிப்பு
தமிழ்நாட்டில் குறுமன்ஸ், காட்டு நாயக்கன், மலைவேடன், கொண்டாரெட்டி ஆகிய பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கப்படுவது இல்லை. இதுகுறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் நேரில் புகார் செய்தும், பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தீர்வு காணப்படுவதற்குப் பதிலாக கோட்டாட்சியர்கள் சிக்கலான உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் மாவட்ட விழிப்புணர்வு குழுவால் மெய்த்தன்மை உறுதி செய்யப்பட்ட 21 நபர்களின் வாரிசுகளுக்கு குறுமன்ஸ் சான்றிதழ் தர மறுத்து உத்தரவு வெளியிட்டுள்ளார். சிவகாசி கோட்டாட்சியர், காட்டு நாயக்கன் சமுதாயத்தை சார்ந்த 15 நபர்களின் மனுக்களை நிராகரித்து நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை மாநகரில் பல தலை முறைகளாக வசித்துவரும் பழங்குடியினத்தவருக்கு கூட சான்றிதழ் மறுக்கப்படுகிறது.
கல்வியாண்டு முடியும் நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்து வெளியே வரும் மாணவர்களின் எதிர்காலம் இருண்ட நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து இதனால் ஏற்பட்டுள்ளது. மேற்குறித்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசை மலைவாழ் மக்கள் சங்க மாநிலக்குழு கோருகிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் மாற்றம்
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக பெ.சண்முகம், மாநில பொதுச்செயலாள ராகபழனிச்சாமி, துணைச் செயலாளர்களாக ஆ.பொன்னுசாமி, அண்ணாமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதன், 24 மார்ச், 2010
மார்ச் 1- விவசாயிகள் மறியலில் மலைவாழ் மக்களும் பங்கேற்கின்றனர்
லேபிள்கள்:
குறுமன்ஸ்,
கோரிக்கைகள்,
பட்டா,
மலைவாழ் மக்கள் சங்கம்