புதன், 24 மார்ச், 2010

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள்: தேசிய ஆணையத்திடம் முறையீடு

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திடம் தீண் டாமை ஒழிப்பு முன்னணி முறையீடு செய்தது.
பூட்டாசிங் தலைமையிலான தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையம் வியாழனன்று (18.2.2010) சென்னைக்கு வருகை தருவதாக அறிவித்திருந்தது. பூட்டா சிங் வர இயலாத நிலையில், அதன் துணைத்தலைவர் தலைமையில் ஆணையம் வருகை தந்தது. பல தலித் அமைப்புகளின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன் னாள் நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானவர்கள் ஆணையத்தை சந்திக்க வந்திருந்தனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில அமைப்பாளர் பி.சம்பத், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், பி.டில்லிபாபு, ஜி.லதா ஆகியோர் சென்றனர்.
பல அமைப்புகள் சார் பாக ஆணையத்திடம் ஏராளமான முறையீடு களும், மனுக்களும் அளிக் கப்பட்டன. ஆலோசனை யை வரவேற்றுப் பேசிய ஆணையத்தின் உபதலைவர் இந்தியாவில் தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், “தீண்டாமை ஒழிப்பு முன்னணி” போன்ற அமைப்புகள் செயல்படுவது பற்றி வியப்புடன் வினவினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆணையத்திடம் விரிவான மனு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய மாநில அமைப்பாளர் பி.சம்பத், “தமிழ்நாட்டில் ஏராளமான வடிவங்களில் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் நீடிப்பதாகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தலித் அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள் அவற்றை ஒழிப்பதற்காகவும், அரசை நிர்ப்பந்திப்பதற்காகவும் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜி.லதா
சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பேசும்போது, “விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் திரௌபதியம்மன் கோவிலுக்கு தலித் மக்களை அழைத்துச் செல்லும் போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தன்னை கொடூரமாகத் தாக்கி காயப்படுத்தியதையும், இதர தலித் மக்கள் தாக்கப்பட்டதையும் உணர்ச் சிப்பூர்வமாக எடுத்துக்கூறி, அமல்ராஜ் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வற்புறுத்தினார்.
தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்துவது, தலித் - பழங் குடி மக்களுக்கான ஆணையம் ஒன்றை தேசிய ஆணையம் போல உரிய அதிகாரம் வழங்கி அமைப்பது, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, தலித் உப திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள், மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்காதது, ஒதுக்கிய நிதியில் மாநில அரசு முறை யாகச் செலவிடாதது, உத்தப்புரத்தில் ஆதிக்க சக்திகள் நிர்ப்பந்தம் காரணமாக டி.கே.ரங்கராஜன் எம்.பி., நிதி ஒதுக்கியும், தமிழக அரசு பேருந்து நிறுத்த நிழற்குடை அமைத்துத்தர மறுப்பது, உத்தப்புரத்தில் தலித் மக்களை அரசமர வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கும் நிலை தொடர்வது, அருந்ததியர் உள்ஒதுக்கீடு உத்தரவை வேலை வாய்ப்பில் முழுமையாக தமிழக அரசை அமல்படுத்தக் கோருவது, மனித மலத்தை மனிதன் அள்ளும் கொடுமைக்கு தமிழகத்தில் முடிவு கட்டுவது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை தமிழகத்தில் உறுதியுடன் அமல்படுத்தக் கோருவது, திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால், பிணத்துடன் ஆற்றில் நீந்தி அடக்கம் செய்யப்படும் கொடுமைக்கு முடிவு கட்டி, பாலம் அமைத்துக் கொடுப்பது அல்லது மாற்று சுடுகாடு ஏற்பாடு செய்து தருவது போன்ற கோரிக்கைகள் மனுவாகவும், நேரடியாகவும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது.
.இப்பிரச்சனைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.