பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் தலித்துகளுக்கு முடிதிருத்த மறுக்கும் தீண்டாமையைக் கைவிட வலியுறுத்தி பொதுக் கூட்டம் நடைபெற்றது. திங்களன்று (15.2.2010) தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த இப்பொதுக் கூட்டத்துக்கு சிஐடியு பனியன் சங்கச் செயலாளர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார்.
தலித் மக்களுக்கு எதிராக தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சட்டப்படி குற்றம். குறிப்பாக கொடுவாயில் ராகம் சலூன் என்ற முடிதிருத்தும் கடையில் தலித் இளைஞர்களுக்கு முடிதிருத்த கடை உரிமையாளர் மறுப்பதற்கு எதிராக கடந்த டிசம்பர் 25, 2009 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மறுபுறத்தில், இந்த தீண்டாமையை நியாயப்படுத்தி, கொடுவாயைச் சேர்ந்த வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மூன்றே நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று திருப்பூர் வட்டாட்சியர் உறுதியளித்தார். எனினும் 50 நாட்கள் கடந்த பின்னும் பழைய நிலை நீடிக்கிறது. முடிதிருத்த மறுக்கும் தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நிர்வாகமும், காவல்துறையும் வாக்குறுதி அளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன. இனியும் இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் தொடரும் என்று பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக- ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், திருப்பூர் எம்.எல்.ஏ. சி.கோவிந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் பி.ராமமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மோகன், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் எஸ்.லோகநாதன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் எஸ்.கந்தவேல் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
புதன், 24 மார்ச், 2010
கொடுவாயில் தலித்துக்களுக்கு முடிவெட்டிவிட மறுக்கும் கொடுமை
லேபிள்கள்:
கொடுவாய்,
தீண்டாமை,
பொங்கலூர்,
பொதுக்கூட்டம்,
முடிவெட்ட மறுப்பு