புதன், 24 மார்ச், 2010

தீண்டாமை ஒழிப்பு விருந்தல்ல, மருந்து! - பி.சம்பத்

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகிய 4 ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தலித் பிரதிநிதிகள் ஊராட்சித் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டமை, உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்பு, கோவை பெரியார் நகர் தீண்டாமைச்சுவர் உடைப்பு, அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள்இடஒதுக்கீடு போன்றவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் வற்புறுத்தல் - போராட்டங்களால் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நிறைவேற்றப்பட்டவையாகும்.
இவ்வாறு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கவே செய்தன. இவ்வாறு வரவேற்றதை அவ்வப்போது ‘முரசொலி’ பத்திரிகையும் மேற்கோள் காட்டி பல கட்டுரைகளை வெளியிடவும் செய்தது.
ஆனால் 11-02-2010 தேதிய முரசொலியில் ‘மனிதநேயமும், மாசற்ற அரசியல் நாகரிகமும்’ என்ற தலைப்பிட்டு கலைஞர் அவர்கள் உடன் பிறப்புக்கு மடல் எழுத, அதனை பரவலாக பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அதன் உள்ளடக்கத்திலும், வார்த்தை ஜாலத்திலும் நளினம் மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கு எதிரான வெறுப்பும் சேர்ந்தே வெளிப்படுவதை படிப்பவர்கள் உணர முடியும்.
சமீப காலமாக அருந்ததியர் மக்களும், அருந்ததியர் அமைப்புகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடுகளை வரவேற்று நடத்திவரும் விழாக்கள் கலைஞருக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கலைஞருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்வோம்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கலைஞருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் “அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கையை என்னிடம் யாரும் முன்வைக்கவில்லை, நானே என்னிடம் கோரிக்கை வைத்து நானே அதை நிறைவேற்றினேன்” என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாரே அத்தகைய விழாக்கள் அல்ல இவை. 25 ஆண்டு கால அருந்ததிய மக்கள் மற்றும் அமைப்புகளின் போராட்டங்களை அங்கீகரித்து, அவர்களின் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்திய போராட்டங்களை அம்மக்கள் வரவேற்று நடத்தப்படும் விழாக்கள் இவை. அருந்ததியர் மக்கள் - அமைப்புகள்- மார்க்சிஸ்ட் கட்சி - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இணைப்பை வலுப்படுத்தும் விழாக்கள் இவை. கலைஞர் சொல்வது போல இந்த விழாக்கள் தமிழக அரசின் செயலை இருட்டடிப்பு செய்யவுமில்லை. பிறகு ஏன் விருந்திட்டோருக்கு நன்றி கூறாமல் விருந்தை அருந்தியவர்களுக்கு நன்றியும் பாராட்டுமா என கலைஞர் சாடுகிறார்? இதன் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.
தலித் மற்றும் அருந்ததியர் மக்களின் சமீபகால வெற்றிகளில், சிபிஐ(எம்) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட இடதுசாரிகளுக்கு எந்த பங்கும் இல்லை- எல்லாமே தன் சாதனைதான் - தானே அறிந்து புரிந்து தலையிட்டு தீர்வு கண்டவைதான் என மக்களிடம் தம்பட்டமடித்து அரசியல் ஆதாயம் தேடத்தான். எனவேதான் “பல ஆண்டு காலமாக நடைபெறாமல் இருந்த, நடைபெற்றாலும் உயிருடன் இருக்க முடியாத ஊராட்சிமன்ற தேர்தல்களை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சி யேந்தல் ஆகிய ஊர்களில் நடத்த முன்வந்த ஆட்சி எது? இருபதாண்டு காலமாக  இருந்த தீண்டாமைச்சுவர் என திகழ்ந்த தீய சுவர்களை இடித்து எறிந்தது எந்த ஆட்சி - யார் துணையோடு? கோரிக்கை வைத்தவர்களின் துணையோடா? அல்லது இந்த ஆட்சியின் அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்வா?” என கேள்விக்கணைகளைத் தொடுக்கிறார். இதன் மூலம் தீண்டாமைக் கொடுமைகளை ஆய்வுசெய்து கண்டறிந்து அம்பலப்படுத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, மக்களைத் திரட்டி இயக்கம் நடத்திய இடதுசாரி அமைப்புகளின் பங்கை உதாசீனப்படுத்துகிறார்.
கலைஞரிடம் நாம் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம். 5 முறை முதல்வராக இருந்தீர்களே? -அதிகாரிகள், காவலர்கள் புடைசூழ ஆட்சி நடத்துகிறீர்களே - தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சியாக திமுக இருக்கிறதே? உங்களால் ஏன் தமிழ்நாட்டில் பல்லாயிரம் கிராமங்களில் இன்றளவும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு காண முடியாமல் போயிற்று. உத்தபுரம், பெரியார் நகர் தீண்டாமைச்சுவர்களை 20 ஆண்டுகாலத்தில் நீங்களே கண்டறிய முடியாமலும், அல்லது தமிழக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு சில ஆண்டுகள் முன்பே புகாராக வந்தும், தகர்த் தெறிய முடியாமலும் போயிற்று? அருந்ததியர் உள்ஒதுககீடு கோரிக்கையை உங்களது கடந்த கால ஆட்சியில் ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று? தமிழகக் கிராமங்களில் பல நூறு கோவில்களில் தலித்துகள் இன்றளவும் நுழைய முடியவில்லை என்பது உண்மைதானே? இரட்டைக்குவளை முறை, பொதுப்பாதை மறுப்பு, மயான உரிமை இல்லாமை, மயான பாதை இல்லாமை என பல ஒடுக்கு முறைகள் உள்ளனவே, இவற்றை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தலித் மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளை நிலை நாட்ட பெரியார் பாதையை உறுதியுடன், ஏன் கடைப்பிடிக்கவில்லை - காங்கியனூர்-உத்தபுரம் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது? பலரையும்சிறையில் அடைத்தது ஏன்? இவை எல்லாம் வெறும் கேள்விகள் அல்ல. உண்மைகள்.
ஆக, கடந்த 42 ஆண்டுகால திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல;
20 ஆண்டுகால உத்தபுரம், பெரியார்நகர் தீண்டாமைச் சுவர்கள் போல பல ஒடுக்கு முறைகள் வெளித்தெரியாமல்  மறைத்து வைக்கப்பட் டுள்ளன என்பதை கலைஞர் மறுக்க முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இடது சாரி இயக்கங்கள் பல்லாயிரம் கிராமங்களில் ஆய்வு செய்து, அமுக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர்ந்து, தலித் மக்களின் சமூக - பொருளாதார உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன. பல தலித் மற்றும் அருந்ததியர் அமைப்புகளையும் இப்போராட்டத்தில் இணைத்துக் கொள்கின்றன. இப்போது நடை பெறும் இயக்கங்களும், விழாக்களும் இதன் ஒருபகுதிதான். பெரியார் பாதையில் நடைபோடுவதாகக் கூறும் திமுக அரசு இப்பிரச்சனைகளில் தலையிட்டு தலித் மக்களின் உரிமைகளை நிலை நாட்ட முன்வருவது அதன் சட்டபூர்வமான கடமையாகும்.
தீண்டாமை ஒழிப்பு என்பது கலைஞர் சொல்வது போல விருந்து அல்ல. சமூகப் பிணிபோக்கும் மருந்து. தமிழ்நாட்டின் இன்றைய நிலையில் தீண்டாமை ஒழிப்பு என்ற மருத்துவம் பெரிய அளவில் சமுதாயத்தை சீர்படுத்த தேவைப்படுகிறது. இடதுசாரி இயக்கங்கள் இதற்கான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும். தமிழக அரசும் தனக்குரிய சட்டபூர்வமான கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும். மாநில அளவில் முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்புக்குழு ஒரு முறைகூட கூடவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளிவந்த ஒரு தகவலாகும். மாவட்ட அளவில், தமிழக அர சால் சம்பிரதாயமாக அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை ஒழிப்புக்குழுக்கள் செயல்படவில்லை என்பதை உணர்ந்து, தீண்டாமை ஒழிப்பில் அக்கறையுள்ள அமைப்புகளையும், ஆர்வலர்களையும் உள்ளடக்கி ஆய்வுக்குழுக்களை அமைத்து தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் தீண்டாமைக் கொடுமைகளை வெளிக்கொணர வேண்டும். கலைஞர் கூறுவது போல இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை என்பதை உணர வேண்டும். இக்கொடுமைகளுக்கு முடிவு கட்ட உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமிழக அரசிடம் வலியுறுத்தியபடி சட்டபூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் கொண்ட தேசிய ஆணையம் போல தமிழ்நாடு தலித்-பழங்குடி ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை உறுதியாக அமல்படுத்த வேண்டும், அருந்ததியர் மக்கள் பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
கட்டுரையாளர்: மாநில அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி