சமூக ரீதியான ஒடுக்குமுறைகளை காலம் காலமாக சந்தித்து வரும் தலித் மக்கள், இயற்கைப் பேரழிவுகளாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். இது தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.
உ.பி. மற்றும் பீகார் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்குகள் தலித்துகளையே அதிகமாகப் பாதிக்கிறது என்பதும், நிவாரண நடவடிக்கைகளிலும் சமூக ரீதியான பாகுபாடுகள் உள்ளன என்பதும் பழைய செய்திகள். கடந்த ஆண்டு ஆந்திராவை உலுக்கி எடுத்த வெள்ளம் தலித்துகள் வாழும் பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கர்நூல், மகபூப்நகர், குண்டூர் மற்றும் கிருஷ்ணா ஆகிய மாவட்டங்களைக் கடுமையாகத் தாக்கியது. பலநாட்கள் கடுமையான இருட்டில் ஆந்திர மக்கள் பொழுதைக் கழித்தனர். இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். எக்கச்சக்க
மான ஏக்கர்களில் இருந்த பயிர்கள் நாசமாகின. கடந்த நூறு ஆண்டுகளில் இவ்வளவு பயங்கரமான வெள்ளத்தை ஆந்திரா பார்த்ததில்லை. ஆந்திர மாநிலம் உருவானபிறகு இதுதான் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழி
வாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் நிவாரணத்தைப் பெறவில்லை.
இந்தப் பிரச்சனைகள் பின்னுக்குப் போகும் வகையில் தனித் தெலுங்கானா கோரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று கோரி மக்களைத் திரட்டும் வகையில் கர்நூல் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியுள்ளது. மற்ற மாவட்டங்களில் அத்தகைய இயக்கங்கள் நடைபெறவுள்ளன. மற்ற அனைத்து கட்சிகளுமே தெலுங்கானா விவகாரத்தில் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடும் பணியை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்த ஆய்வுகள், அதிர்ச்சிக்குரிய விபரங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஏழைகளை, குறிப்பாக தலித்துகளைத்தான் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதுதான் அந்த விபரங்கள். ஆந்திர வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 308 கிராமங்களில் 1,090 குடியிருப்புப் பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. பல்வேறு தலித் அமைப்புகள் உள்ளிட்ட 13 தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. தலித்துகளுக்கு ஏற்பட்ட இழப்பு, சமமான இழப்பீடு விநியோகம், நிவாரண நடவடிக்கைகளின்போது மரியாதை மற்றும் பாரபட்ச அணுகுமுறை ஆகிய அம்சங்களைக் கண்டறிய இந்த ஆய்வு முயன்றது. தலித்துகள் எந்தவகையிலாவது நிவாரணத்தைப் பெற்றுள்ளார்களா என்பதைத்தான் அந்த ஆய்வு கண்டறிய விரும்பியது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 38 விழுக்காடு குடும்பங்கள் தலித்துகளின் குடும்பங்கள்தான். வெள்ளத்தில் பலியானவர்கள் மற்றும் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாகக் கருதப்படுபவர்கள் ஆகியோரில் 55 விழுக்காட்டினர் தலித்துகளாவர். வெள்ளம் தாக்கும்முன்பே மோசமான வீடுகளில்தான் தலித்துகள் வாழ்ந்து வந்தார்கள். அந்த வீடுகளையும் வெள்ளம் விட்டுவைக்கவில்லை. வெள்ளத்தின் தாக்குதலால் வீடுகளை இழந்தவர்களில் பாதிப்பேர் தலித்துகள்தான் என்று ஆய்வு கூறுகிறது. நிலங்களில் பயிர்களை இழந்தவர்களில் குறைவான அளவில்தான் தலித்துகள் பாதிக்கப்பட்டார்கள். பயிர்ச் சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 28 விழுக்காடுதான் தலித்துகள். அவர்கள் கைகளில் நிலங்கள் இல்லை என்பதுதான் இவ்வளவு குறைவாக அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்குக் காரணமாகும்.
தாழ்வான பகுதிகளில்தான் பொதுவாக தலித்துகள் வாழ்கின்றனர் என்பதுதான் அதிகமான பாதிப்புகளுக்குக் காரணம் என்கிறார் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த ஜி.நரசிம்மா. நிவாரணப் பணிகளில் தலித்துகளுக்கு முன்னு
ரிமை தர வேண்டும். இருப்பிடங்களுக்கான மனையிடங்களை அவர்களுக்கு முதலில் வழங்கிட வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம் என்கிறார் அவர். முன்னுரிமை பெற வேண்டிய இவர்கள், பல கிராமங்களில் கடைசியாகத்தான் நிவாரணம் பெறும் அவலம் உள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், பல தொண்டு நிறுவனங்களே இதர பகுதியினரைப் பார்த்து நிவாரணம் வழங்கிவிட்டுதான் தலித் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட தலித் குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இன்னும் பள்ளிக்கூடங்களுக்கு திரும்பவில்லை. பள்ளிக்கூடங்களுக்கு திரும்பிய குழந்தைகளுக்கும் படிப்பதற்கு போதிய வசதி இல்லை. அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதித்தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. அதோடு, இத்தகைய பேரழிவுகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் சாதிப்பாகுபாடு பார்க்காமல் இருப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் ஆய்வின் முடிவாக தெரிவித்துள்ளனர்.