தலித்துக்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சிவ கங்கை மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று, தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கூட்டம் வி.சௌந்த ரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
அத்தீர்மானத்தில் இதுபற்றி மேலும் குறிப்பிட்டு இருப்பதாவது:
தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுகிற தலித் மக்கள் கொடுக்கிற புகார்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் கூட அடுத்த சில மாதங்களில் எம்எஃப் (பொருண்மைத் தவறு) என்று தள்ளுபடி செய் யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத்தடுப்புச் சட்ட அமலாக்கத்தின் கண்காணிப்பு மற்றும் விழிப்புக்குழுவின் தலைவர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. வன்கொடுமை நிகழ்ந்த இடங்களை நேரில் பார்வையிடுவது, வன்கொடுமைக்கு ஆளாகி இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, தலித் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் ஈடுபடுவதில்லை.
கடந்த 26.01.2010 குடியரசு தினத்தன்று கிராமசபைக் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த திருப்புவனம் ஒன்றியம் டி.ஆலங்குளம் ஊராட்சி மன்ற (தலித்) பெண் தலைவர் மனோன்மணி என்பவரையும், அவரது கணவரையும் ஆதிக்க சாதியைச்சேர்ந்த ஊராட்சி எழுத்தர் கத்தியால் குத்தி கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தில் காவல்துறை உரிய வழக்கும் பதிவு செய்யவில்லை, குற்றவாளியையும் இதுவரை கைது செய்யவில்லை.
அதேபோல மானாமதுரை ஒன்றியம் வேம்பத்தூர் ஊராட்சி மன்ற (தலித்) தலைவர் முருகன் குடும்பத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்கியதில் அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திலும் காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை விட்டு விட்டதாகத்தெரிகிறது. இத்தகைய தலித் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியான கடமைகளை மாவட்ட ஆட்சியர் ஆற்றிடவில்லை.
எனவே சிவகங்கை மாவட்டத்திற்கு செயல்துடிப்புள்ள, ஐஏஎஸ் அதிகாரியை மாவட்ட ஆட்சியராக நியமித்திடுமாறு தமிழக முதல்வரையும், தலைமைச் செயலாளரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.அர்ச்சுணன், செயற்குழு உறுப்பினர்கள் எ.ஆர்.கே.மாணிக்கம், ஆர்.கே. தண்டியப்பன், எம்.கந்தசாமி, ஆர்.மணியம்மா, ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.பாண்டி யன், ஏ.ஆர்.மோகன், வி.கருப் பச்சாமி, எ.கிருங்கைச்செல் வன், எஸ்.எம்.பூபதி, கே.அழ கர்சாமி, ஏ.ஜெயராமன், ஏ.சேது ராமன், பி.செல்வராஜ் மற்றும் சாந்தி, ஷேக்முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.