தீண்டாமைக்கொடுமைக்கு எதிரான போராட்டத்தில் யாரையும் வேறுபடுத்தி பார்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை. ஜனநாயக, சமூகநீதி சக்திகள் இந்த போராட்டத்தில் இணைந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குறிப்பிட்டார்.
கோவை 10-வது வட்டம் தந்தை பெரியார் நகரில் 21 ஆண்டுகாலமாக நீடித்த தீண்டாமைச் சுவரை அகற்ற போராடியதற்காக புதனன்று நடைபெற்ற நன்றி பாராட்டு விழாவில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் பேசியதாவது:
தீண்டாமைக் கொடுமை கண்டு வெகுண்டெழுந்து வைக்கம் வரை சென்று போராடியவர் தந்தை பெரியார். ஆனால் இங்கு பெரியார் நகர் அருந்ததியர் மக்களை பொது வழியில் செல் லவிடாமல் வழிமறித்து 21 ஆண்டுகளாக தீண்டாமை சுவர் நீடித்துள்ளது. சுவருக்கு அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உள்ளவர்கள் பஞ்சாலைத் தொழிலாளர்கள்தான். அங்கு ஒன்றாக கூலிப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்கள்தான்.
இங்குள்ள தீண்டாமைச் சுவரை அகற்றியதற்காக தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம். கார் டிரைவருக்கு முக்கிய பணி கார் ஓட்டுவது. அதற்காக அவரை யாரும் பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. இருந்தாலும் விபத்தில்லாமல் லாவகமாக கார் ஓட்டியதற்காகப் பாராட்டுவோம். அதை விடுத்து நேரெதிர் திசையில் வந்தால் விபத்து தான் ஏற்படும்.
தமிழகத்தில் 50 இடங்களில் புதைகுழிச் சாக்கடைகள் உள்ளன. அவற்றில் இறங்கி அப்புறப்படுத்துவது யார்? அருந்ததிய இளைஞர்கள்தானே. தமிழகம் முழுவதுமுள்ள சுடுகாடுகளில் பிணம் எரிப்பது, புதைப்பதும் யார்? தலித் மக்கள்தானே.
சென்னையில் மட்டும் சாக்கடை அள்ள இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் அங்கு மட்டும் தான் 173 மயானப் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். இதனைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்திக் கொண்டுவர வேண்டும் என்கிறோம்.
தரிசு நில, புறம்போக்கு நில விநியோகம் என்றால், தொகுப்பு வீடுகள் கட்டித்தருவது என்றால், அதில் முதல் நபராக அருந்ததியருக்குக் கொடு என்கிறோம். 63 ஆண்டுகால சுதந்திர வாழ்வில் அருந்ததியர் வாழ்நிலை இன்னும் நிமிரவில்லையே? கட்டுவதற்குத் துணியின்றி, குந்தக் குடி சையின்றி பரிதவிக்கிறார்களே.
இந்த அவலத்தைப் போக்க அனைவரும் எழுந்து போராட வேண்டும், தீண்டாமையை ஒழிக்க பாடுபட வேண்டும். இதில் நாங்கள் யாரையும் வேறுபடுத்திக் பார்க்கவில்லை. இந்தியப் பணம் ரூ. 90 லட்சம் கோடி சுவிஸ் வங்கியில் உள்ளதே. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் தொடர்பு இல்லையா? தாங்கமுடியாத விலைவாசியால் பல குடும்பங்கள் நொறுங்கிப் போயிருக்க, ஆன்-லைன் வர்த்தக அனுமதியால் பெருமுதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதை எதிர்த்த போராட்டத்திலும் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.