கடலூர் மாவட்டம், பழையபட்டினம் கிராமத்தில் அகற்றப்பட்ட அதே இடத்திலேயே டாக்டர் அம்பேத்கரின் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில் உள்ளது பழையபட்டினம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றவர்கள் கைது என்று தினசரி பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பழையபட்டினம் கிராமத்திற்கு விசாரித்தனர்.
அப்போது அந்த கிராம மக்கள் தெரிவித்த விவரங்கள் வருமாறு: -
பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் பழையபட்டினம் கிராமத்தில் வசித்து வந்தாலும், தலித் மக்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு கிராமத்தின் பொது இடத்தில்- நூலகம், ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ள இடத்தில்- அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
அதுவரை பொதுமையாக இருந்த ஒரு தரப்பினர் (முஸ்லிம்கள்) அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்றும், அந்த சிலையை அகற்ற வேண்டும் என்றும் குரல் எழுப்பி வந் தனர். இவர்களுக்கு ஆதரவாக அரசு எந்திரம் செயல்பட்டது.
மேலும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்த அந்த சமூக மக்கள், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்றும் கூறவே, அவரும் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க சம்மதம் தெரிவித்து எழுத்துப் பூர்வமாக கடிதம் கொடுத்தார். இது எங்கள் தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, எந்த தரப்பிற்கும் இடையூறு இன்றி பொது இடத்தில் உள்ள சட்டமேதை அம்பேத்கர் சிலையை அப்புறப்படுத்தக் கூடாது என்றும், அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போராட்டத்தையும் வாலிபர் சங்கம் அறிவித்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தன்று தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து போராட்டத்தை நடத்தியது. இதற்கு அந்த கிராம மக்களும் ழுழு ஆதரவும் தெரிவித்தனர்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற வாலிபர் சங்கத்தினர் 200 பேரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்தனர். மேலும் ஏராளமான காவல்துறையினரை குவித்து பதட்டத்தை ஏற்படுத்தியதோடு கிராமத்திற்குள் யாரையும் நுழைய விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைப்பதற்கான முயற்சியில் காவல்துறையும், வருவாய்த் துறையும் ஈடுபட்டு வந்தது. இதனால் வாலிபர் சங்கத்தின் பழையபட்டினம் கிளைச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அந்த வழக்கில் அம்பேத்கர் சிலை யை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசி தரன் ஆகியோர் 2010 ஜனவரி மாதம் 20ம் தேதி வரை தடை ஆணையை பிறப்பித்தனர். இதனை அறிந்த காவல்துறையும், வருவாய்த்துறையும் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி நள்ளிரவில் நீதி மன்றத்தின் உத்தரவை மீறி சிலையை அகற்றி, தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை சமப்படுத்தி அம்பேத்கர் சிலையை நிறுவிவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது பழையபட்டினம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்களை வீட்டிலிருந்து வெளியே வர விடாமல் காவல் துறையினரை குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த அராஜகச் செயல் தலித் மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் அமிர்தலிங்கம் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இம்மனுவை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் பல கட்ட சாட்சியங்களை விசாரணை செய்தது. பின்னர் குழு ஒன்றையும் அமைத்தது. உயர்நீதிமன்ற பதிவாளர் விஜயன் தலைமையில் 5 வழக்கறிஞர்கள் பழையபட்டினம் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கிற்காக கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் 2 முறை சென்னை சென்று சாட்சி யம் கூறினார்கள். இதேபோல் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி சசிதரன் ஆகி யோர் வியாழனன்று தீர்ப்பளித்தனர். அதில் மிகப்பெரிய தலைவர்களின் சிலைகளை அவமதித்த காவல்துறை, வருவாய்த்துறையினரை இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கிறது என்றனர்.
நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி இரவு 11 மணிக்கு மேல் சிலையை அப்புறப்படுத்திய தையும் கண்டிக்கிறது. அம்பேத்கர் சிலையை ஏற்கனவே இருந்த பொது இடத்திலேயே மீண்டும் நிறுவ வேண்டும். பிப்ரவரி 20 இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறப்பு விழா நடத்த வேண்டும் என்றும், சிலையை அப்புறப்படுத்திய வட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் ஊதியத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் பிடித்தம் செய்து மனுதாரர் அமிர்தலிங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அந்த தீர்ப்பில் உத்தரவிட்டனர்.
மனுதாரர் சார்பில் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, தியாகு, புருஷோத்தன் ஆகியோர் ஆஜரானார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து வாலிபர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் என்.அசோகன் கூறுகையில், இது வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் நீதி நியாயம் வென்றுள்ளது என்றும் தெரிவித்தார். நீதிமன்ற தீர்ப்பை தலித் மக்கள் வரவேற்றுள்ளதோடு வாலிபர் சங்கத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
வியாழன், 4 மார்ச், 2010
அகற்றப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கார் சிலையை நிறுவ வேண்டும்- வாலிபர் சங்கம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
லேபிள்கள்:
அம்பேத்கர் சிலை,
உயர்நீதிமன்றம் உத்தரவு,
பழையபட்டினம்,
வாலிபர் சங்கம்