திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரத்தில் நீதிபதி தினகரன் ஆக்கிரமித்துள்ள அரசு புறம் போக்கு நிலங்களை மீட்டு அக்கிராமத்தில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித்துகளுக்கும், நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கும் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களை கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ளார். இந்நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை எடுத்து அப்பகுதியில் உள்ள இருளர் மற்றும் அருந்ததியர் உள்ளிட்ட தலித் மக்களுக்கும் நிலமற்ற தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்க ளாக நிலமீட்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வலுவான போராட்டங்களுக்கு பிறகு, நில ஆக்கிரமிப்பு காரணத்திற்காக நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மத்திய நில அளவை குழுவினர் கடந்த ஒரு மாதமாக நிலத்தை அளந்து வருகின்றனர். நீதிபதிக்கு சொந்தமான பட்டா நிலம், அரசு புறம்போக்கு நிலம் என தனித்தனியாக பிரித்து அளந்து முடித்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு புறம் போக்கு நிலம் என கருதும் 199.53 ஏக்கர் நிலத்தை முதல் கட்டமாக எடுத்து நிலமற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதன்கிழமையன்று (பிப்.10) திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் மறியல் நடைபெற்றது.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் ப.சுந்தரராசன், மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.அனீப், மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன், மாவட்டப் பொருளாளர் கே.ஆறுமுகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.து.கோதன்டன், மாவட்ட துணைச் செயலாளர் பி.நடேசன், மக்கள் வாழ்வாதார மண்ணுரிமை இயக்க மாநிலத் தலைவர் வி.எம்.ராமன், மக்கள் இயக்கத்தின் கூட்டமைப்பு தலைவர் கொல்லாபுரி ஆகியோர் பேசினர். இதில் 300 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பெ.சண்முகம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செய லாளர் பெ.சண்முகம் பேசியதாவது:-
காவேரிராஜபுரம் நில விவகாரம் சம்மந்தமாக கடந்த மூன்று மாதமாக அரசு அசைவின்றி இருக்கிறது. மத்திய அரசு நில அளவை குழுவை வைத்து நிலங்களை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நிலம் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து உச்சநீதிமன்றத்திற்கும், மாநில அரசுக்கும் அறிக்கை அனுப்பிய பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தவே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தமிழக அரசு நிலத்தை எடுத்து ஏழைகளுக்கு வழங்க யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை. சாதிய சாயம் பூசுவது எல்லாம் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கமே என்றார்.
வியாழன், 4 மார்ச், 2010
காவேரிராஜபுரத்தில் விவசாயிகள் மறியல்
லேபிள்கள்:
காவேரிராஜபுரம்,
நில ஆக்கிரமிப்பு,
நீதிபதி தினகரன்,
விவசாயிகள் மறியல்