வியாழன், 4 மார்ச், 2010

பழங்குடியினர் பட்டியல் விவகாரம்: முதல்வர் தலையிட கோரிக்கை

பழங்குடியினர் பட்டியல் தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெ.சண்முகம் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:
ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, அவர்களின் வாழ்வியல் சூழல் குறித்து அறிக்கை அனுப்புமாறு, கடந்த 2001-ஆம் ஆண்டு மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
அதன் அடிப்படையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் தமிழகம் முழுவதும் விரிவான ஆய் வினை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், மேற்கண்ட மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரையை, 2006ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியது.
தற்போது இந்தியப் பதிவாளர் குறுமன்ஸ் இனத்தில் “குறுமன்” என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இதர உட்பிரிவுகள் அனைத்தையும் ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக அரசுக்கு தெரிவித்து விட்டதாக அறிகிறோம்.
பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் - நீக்கல் குறித்து மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள வழி முறைகளில் ஒன்றான மூன்று முறை திருப்பி அனுப்பப்பட்டு விட்ட பரிந்துரையை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்ற வழிமுறையைக் காட்டி தள்ளுபடி செய்திருப்பது எந்த விதத்திலும் சரியானதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மேற்படி இனமக்கள் அனைவருமே கடந்த 30 ஆண்டு காலமாக பல்வேறு காலகட்டங்களில் தமிழக அரசால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளவர்கள், ஒவ்வொரு முறையும் கிடப்பிலே போடுவது அல்லது புதிது புதிதாக விளக்கம் கேட்பது என்ற அணுகுமுறையைத்தான் இந்தியப் பதிவாளர் மேற்கொண்டு வருகிறார்.
எனவே, இந்தப் பிரச்சனையில் தாங்கள் உடன் தலையிட்டு இந்தியப் பதிவாளர் கேட்டுள்ள விளக்கங்களையும், விபரங்களையும் உடன் அனுப்ப ஏற்பாடு செய்வதுடன், தள்ளுபடி செய்யப் பட்டுள்ள குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினரை மீண்டும் பரிசீலிக்க தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்படி இனமக்கள் அனைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தங்களின் மேலான தலையீட்டை வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.