வியாழன், 4 மார்ச், 2010

தலித் ஊராட்சித்தலைவி மீது கொலைவெறித் தாக்குதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள டி.ஆலங்குளம் தலித் ஊராட்சித் தலைவரான தன்னையும், தனது கணவரையும் கொடூரமான ஆயுதத்தால் வெட்டிய சாதிவெறியன் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட தலித் ஊராட்சித் தலைவர் ம.மனோன்மணி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர், மதுரையில் புதனன்று (10.2.2010)செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டி.ஆலங்குளம் ஊராட்சியின் முதல் தலித் பிரதிநிதியாக கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அப்போது ஊராட்சி மன்ற எழுத்தராக பணிபுரிந்த பா.பாலகுரு என்பவர், நான் தலித் என்பதால் மக்கள் பணி செய்ய விடாமல் தொடர்ந்து தடுத்து வந்தார். மேலும் கடந்த 31.3.2008 அன்று எனது சாதியைச் சொல்லித் திட்டி மானபங்கம் செய்ய முயன்றார். இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நட வடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில், எழுத்தர் பாலகுரு, இடமாறுதல் செய்யப்பட்டார். இதனால் அவரும், அவரு டைய அடியாட்களும் தொடர்ந்து மிரட்டி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26.1.2010 அன்று குடியரசு தினக்கொடியேற்றி, கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்காக செல்ல காரில் புறப்பட்டஎன்னை, பாலகுரு சாதியைச் சொல்லித் திட்டி, நீ கொடியேற்றக்கூடாது என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினார். இதில் எனக்கும், எனது கணவர் மதிவாணனுக்கும் படுகாயம் ஏற்பட்டது. அப்போது காரின் முன் அமர்ந்திருந்த திருப்புவனம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமலிங்கமும், நானும் காப் பாற்றுங்கள் என சத்தம் போட்டதால் பாலகுரு அங்கிருந்து ஓடிவிட்டார். திருப்புவனம் காவல் நிலையத்தில் சென்று கதறினோம். அவர்கள் முதலுதவி அளித்து மதுரை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வாக்குமூலம் வாங்கப்பட்டது. ஆனால், எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என முதல் தகவல் அறிக்கையை பார்த்த பின்புதான் தெரியவந்தது.
எம்.பில். படித்துள்ள என்னை மக்கள் பணி செய்யவிடாமல் பாலகுரு தடுப்பது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாக்குதல் நடத்திய பாலகுரு மீது உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யாத மானாமதுரை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண் டும். எங்களுடைய மருத்துவச்செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும்.
இவ்வாறு மனோன்மணி கூறினார்.
இப்பேட்டியின் போது மக்கள் கண்காணிப்பக நிர் வாக இயக்குநர் ஹென்றி டிபேன், வழக்கறிஞர் சி.சே. ராசன், சுப்பு ஆகியோர் உடனிருந்தனர்.