உள்ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உள்ஒதுக்கீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 மார்ச், 2010

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும்- பிப்.15-ல் மாநிலம் தழுவிய போராட்டம்

அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பிப்ரவரி 15-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்களை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அருந்ததிய அமைப்புகளின் தலைவர்கள் இப்போராட்டங்களை தலைமை ஏற்று நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மின்வாரியத் தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமனங்களில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தாத தைக் கண்டித்தும், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அருந்ததியருக்கான உள்ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்தக் கோரியும், பல மாவட்டங்களில் அருந் ததியினர் பிரிவினருக்கு உரிய சாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்தும், தமிழகத்தின் அனைத்து பின்னடைவு காலியிடங்களை உடனடியாக நிரப்பவும், பல்லாயிரக்கணக்கான காலியிடங் களை பூர்த்தி செய்ய வலியுறுத்தியும் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் பங்கேற்போர் விபரம்:
ஈரோடு  -    பி.சம்பத், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பி.பி.பழனிச்சாமி, சக்தி கருப்பசாமி, கே.சென்னியப்பன்.
விருதுநகர்  - கே.பாலபாரதி, கே.சாமுவேல்ராஜ், பி.சுகந்தி, ஜக்கையன்
திருநெல்வேலி - என்.நன்மாறன், ஆர்.கிருஷ்ணன், மரியதாஸ்
திருச்சி  -  எஸ்.கே. மகேந்திரன், எம்.ஜெயசீலன், அண்ணாதுரை,
கோவை - ஜி.லதா, யு.கே.சிவஞானம், ரவிக்குமார், வி.பெருமாள், வெண்மணி
திருப்பூர் - சி.கோவிந்தசாமி, எஸ்.கண்ணன், ராமமூர்த்தி
நாமக்கல் - டில்லிபாபு, துரைசாமி
தருமபுரி - பி.சண்முகம், வெங்கடேசன், வேல்முருகன்
தேனி - ஏ.லாசர், வெங்கடேசன்.
தூத்துக்குடி - க.கனகராஜ், இசக்கிமுத்து
நீலகிரி - சதாசிவம், ஆர்.பத்ரி
சேலம் - கே.எஸ்.கனகராஜ், ஆர்.தர்மலிங்கம்.
ஈரோட்டில் மின்வாரியத் தலைமைப்பொறியாளர் அலுவலகம் முன் பாகவும், திருப்பூரில் மாந கராட்சி அலுவலகம் முன்பும், மற்ற இடங்களில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

செவ்வாய், 15 டிசம்பர், 2009

மார்க்சிஸ்ட் கட்சிக்கு பாராட்டு விழா - அருந்ததியர் இயக்கங்கள் முடிவு

அருந்ததியர் உள்ஒதுக்கீடு கிடைப்பதற்கு உற்ற துணைவனாக உடனிருந்து உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் ஜனவரி 24ம் தேதி பாராட்டு விழா நடத்துவதென அனைத்து அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் முடிவு செய்தது.

திருப்பூரில் புதன்கிழமை (9.12.09) அருந்ததியர் இயக்கங்களின் கூட்டுக் கூட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் அருந்தமிழர் விடுதலை இயக்கம் சார்பில் கு.ஜக்கையன், வி.குமார், கவுதம சக்திவேல், பி.முருகேசன், டி.நாகராஜ், கோவை சூர்யா, கோவை ஜெயராமன், ஏ.அருண், ப.சுந்தரம், இளவேனில், வெ.பொ.நாவ ளவன், ஆதித்தமிழர் பேரவை சார்பில் நீலவேந்தன், தமிழ்வேந்தன், நாகராஜ், கருப்பசாமி, ஆதித் தமிழர் சனநாயகப் பேரவை சார்பில் அ.சு.பவுத்தன், அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் விழுதுகள் ஆர்.நாதன், அருந்ததியர் விடுதலை முன்னணி சார்பில் என்.டி.ஆர்., ஆதித்தமிழர் விடுதலை முன்னணி சார்பில் கோவை ரவிக்குமார், சோ.ப.மதன்குமார், தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கா.பத்ரன், பி.ரவி, கே.மூர்த்தி, ஜி.குமாரவேல், தலித் விடுதலைக் கட்சி சார்பில் இரா.மூர்த்தி, மு.சுந்தரம், ஆறுச்சாமி, வீர அருந்ததியர் பேரவை சார்பில் அர.விடுதலைச் செல்வன், ஓ. ரங்கசாமி, என்.முருகன், தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் பி.ராமமூர்த்தி, செ.முத்துக்கண்ணன் (திருப்பூர்), யு.கே.சிவஞானம், கணேஷ் (கோவை), ஆர்.பத்ரி, ஆர்.சதாசிவம் (நீலகிரி), பி.வெங்கடேசன் (தர்மபுரி), ந.வேலுசாமி, சி.துரைசாமி (நாமக்கல்), பி.பி.பழனிசாமி, கருப்பசாமி (ஈரோடு) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அருந்ததியர் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு கிடைப்பதற்காக அருந்ததியர் அமைப்புகளோடு உற்ற துணைவனாக உறுதியாகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் மக்கள் அமைப்புகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி மேலும் முன்னெடுத்துச் செல்வதென தீர்மானிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவையில் வரும் ஜனவரி 24-ம் தேதி பாராட்டு விழா நடத்துவது என்றும், இந்த விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோரை அழைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த விழாவுக்கு மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான அருந்ததியர் மக்களை அணி திரட்டி வருவது, அதற்காக ஜனவரி 17-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு அருந்ததியர் குடியிருப்புப் பகுதிகளில் ஊர்க் கூட்டங்கள் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது, இந்த விழா பற்றி சுவர் விளம்பரங்கள், தட்டி பலகைகள் மூலம் பரவலாக விளம்பரம் செய் வது, துண்டறிக்கைகள் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நிறைவாக பேசிய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், ஒன்றுபட்ட போராட்டம் காரணமாகவே அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது முறையாக அமலாவதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. நிலம், குடிமனைப்பட்டா போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்றார்.

திங்கள், 14 டிசம்பர், 2009

அருந்ததியர் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தது செங்கொடி இயக்கம் - என். வரதராஜன் பெருமிதம்




திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில், ரெட்டியார்பட்டி காலனி, நீலமலைக்கோட்டை காலனி, ரெட்டியார் சத்திரம் காலனி அருந்ததிய மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் என்.வரதராஜன் நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அருந்ததியர் மக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

அருந்ததியர் மக்களோடு இன்று நேற்றல்ல, ஆண்டாண்டு காலமாக அவர்களோடு இரண்டறக் கலந்த இயக்கம் செங்கொடி இயக்கம். திண்டுக்கல் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி ஆற்றிய பங்கை அவ்வளவு குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது பஞ்சப்படிக்காக, உடைக்காக, சமூக மேம்பாட்டிற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இந்த நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகி என்ன பயன்? இன்றும் கூட மனித மலத்தை சுமக்கும் அவலத்தை அருந்ததிய மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். குடியிருக்க வீடு இல்லை. குடியிருக்கும் வீட்டுக்குப் பட்டா இல்லை. ரேசன் கடையில் நல்ல அரிசி போடவில்லை. பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க முடியவில்லை. 2 ஏக்கர் திட்டம் என்கிறார்கள். அந்தத் திட்டத்தின்படி யாருக்கும் நிலம் கிடைக்கவில்லை. மயானம் இல்லை, மயானம் இருந்தால் அதற்குப் பாதை இல்லை. தொகுப்பு வீடு கட்டித்தரப்படவில்லை என்று ஏராளமான புகார்களை நீங்கள் என்னிடம் கூறி உள்ளீர்கள்.

100 பேருக்கு அரசின் வேலைவாய்ப்பு கிடைத்தால், அதில் தலித் மக்கள் 18 பேருக்கு வேலை தர வேண்டும். ஆனால், அந்த 18 தலித் இளைஞர்களில் ஒரு அருந்ததியருக்குக்கூட வேலை கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு கல்வியில், வேலைவாய்ப்பில் அருந்ததிய மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளனர். எனவே தான் அருந்ததிய மக்களின் சமூக விடுதலைக்காக சென்னையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தினோம். ஆர்ப்பரித்தோம். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 6 சதவீதம் வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். மகஜர் கொடுத்தோம். ஆனால் அரசு 3 சதவீதம்தான் தந்தது. உள்ஒதுக்கீட்டில் 6 சதவீதம் பெறுவதற்கான போராட்டத்தை நாம் தொடர்ந்து நடத்த வேண்டியுள்ளது. தீண்டாமை எனும் கொடுந்தீயில் அருந்ததிய மக்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு போராட்டம் தான்.

நகர் மற்றும் கிராமப்புறங்களில் இறந்த மனிதனை எரிப்பது, புதைப்பது, தப்படிப்பது போன்ற பணி யை அருந்ததியர் செய்கிறார்கள். நமது தலைமையில் அருந்ததியர் அமைப்புக்கள் எழுப்பிய முழக்கத்தின் எதிரொலியாகத்தான் சென்னையில் மட்டும் 175 பேருக்கு மயான உதவியாளர் பணி வழங்கப்பட்டது. ஏன் அரசு அதனை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தக் கூடாது? தொடர்ந்து நமது போராட் டங்களில் வலியுறுத்துவோம். பொருளாதார நெருக்கடியிலிருந்தும், சமூக நெருக்கடியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அருந்ததியர்களுக்கு விடுதலையைப் பெற்றுத்தருவோம்.

இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.

சனி, 12 டிசம்பர், 2009

போராட்ட வரலாற்றை மறைக்கலாமா? - பி.சம்பத்


“....நீங்கள் பேசும் போது சொல்லிக் கொண்டீர்கள். நீங்கள் என்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதை நான் நிறைவேற்றிக் கொடுத்ததாக வும் பேசும் போது துரைச்சாமியும், ரவிச்சந்திரனும் சொன்னார்கள். நான் சொல்லுகிறேன். நீங்கள் யாரும் கோரிக்கை வைத்து நான் கொடுக்க வில்லை. இப்படிச் சொல்வதற் காக நீங்கள் என்னை மன்னிக்க வேண் டும். நானே கோரிக்கை வைத்து, நானே நிறைவேற்றிக் கொண்ட திட்டம்தான் இந்தத் திட்டம். நான் யாரிடத்தில் கோரிக்கை வைப்பது? என்னிடத்திலே தான் கோரிக்கை வைக்க வேண்டும்....”

..... அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதற்காக, சென்னையில் ( 5.12.09)நடைபெற்ற பாராட்டு விழாவில், தமிழக முதல்வர் கலைஞர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது.

இந்த உரையில் கலைஞரும், திராவிட இயக்கமும், சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றியப் பணிகளை உணர்ச்சி கரமாக எடுத்துரைத்துள்ளார். அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண் டும் என்ற கோரிக்கையை ஏற்று, 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளதை நாம் ஏற்கனவே வரவேற்றுள்ளோம்.

ஆனால் இந்த உள்ஒதுக்கீடு பெற நடைபெற்ற போராட்டங்களைப் பற்றி எதுவுமே குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் விவரிப்பது என்ன தார்மீக நியாயம் என நமக்கு விளங்கவில்லை. அருந்ததியர் உள்ஒதுக்கீடு என்பது இப்போதைய திமுக ஆட்சியில் மட்டும் முன்வைத்து பெறப்பட்ட கோரிக்கையல்ல. 25 ஆண்டு களுக்கு மேலாக அருந்ததியர் அமைப்புக்களும், அருந்ததியர் மக்களும் அதற்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர். இப்போராட்டங்கள் எதுவும் ஆளும் வர்க்கங்களாலும் அரசாங்கத்தாலும், ஏன் இதற்கு முந்தைய திமுக ஆட்சிக் காலங்களிலும் கண்டுகொள்ளப்படவே இல்லை. ஊடகங்களும் கூட அருந்தியர் மக்களின் கோரிக்கைக்கு உரிய நியாயமோ முக்கியத்துவமோ தரவில்லை.

அருந்ததியர் மக்களின் நீண்ட நெடும் போராட்டங்களை ஆய்வுசெய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2 ஆண்டுகளுக்கு முன்பே அம்மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியது. 2007 ஜூன் 12-ம் நாள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்களைத் திரட்டி கோட்டை நோக்கிப் பேரணியை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது. அருந்ததியர் அமைப்புகளின் தலைவர் களோடு தமிழக முதல்வரை அன்றைய தினமே மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் சந்தித்தார்கள். சிறப்பான கலந்துரையாடலுக்குப் பிறகு தமிழக முதல்வர், அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அப்போது அறிவித்தார். மார்க்சிஸ்ட் கட்சியும் அருந்ததியர் அமைப்புகளும் கேட்டுக் கொண்டதற்கிணங்க இக்கோரிக்கையை ஆய்வு செய்து சிபாரிசு அளிக்க ஒரு கமிஷன் அமைக்கவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு இது அமலாக காலம் கடக்கவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மாநாடுகள், 100 இடங்களில் தர்ணா, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாநிலம் தழுவிய மறியல் என பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் பிறகு நீதியரசர் ஜனார்த்தனம் கமிஷன் அமைக்கப்பட்டு அதன் சிபாரிசாக 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அறிக்கை தரப் பட்டது.

இதன் பிறகு கோட்டையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ஒதுக்கீடுக்கு ஒப்புதல் தெரிவித்தன. அதன் பிறகு சட்டமன்றத்தில் 3 சதவீத உள்ஒதுக்கீடுக்கான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு இதற்கான அரசாணை வெளிவந்தது. இந்த உள்ஒதுக்கீட் டில் சில அருந்ததியர் பிரிவினர் விடுபட்டுள்ளதால் அவர்களையும் இணைத்து உள்ஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும் என்ற உணர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அருந்ததியர் அமைப்புகளுக்கும் இருந்தது. ஆயினும் 3 சதவீத உள்ஒதுக்கீடு? முதல் கட்ட வெற்றி என்ற நிலை எடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசின் முன்முயற்சிக்கும், முடிவுக்கும் வரவேற்பு தெரிவித்தது. இதற்காக நீண்ட காலம் போராடிய அருந்ததியர் மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தும், தனித்தும் போராடிய அருந்ததியர் அமைப்புகளுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி பாராட்டு தெரிவித்தது. அருந்ததியர் உள்ஒதுக்கீடு பற்றிய பிரச்சனையில் இவை தான் வரலாற்று ரீதியான உண்மைகள். தமிழக முதல்வரும், சில பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு பிரச்சனையில் மார்க்சிஸ்ட் கட்சி காட்டிய ஆர்வத்தையும் தலையீட்டையும் ஏற்றுக்கொண்டார்.

ஆனால் 5.12.2009-ந் தேதிய பாராட்டு விழாவில் அருந்ததியர் மக்களின் போராட்டங்களைப் பற்றியோ, அருந்ததியர் அமைப்புக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய இயக்கங்களைப் பற்றியோ எதுவும் குறிப்பிடாமல், எல்லாமே தனது சாதனையாகவும் தனது இயக்கத்தின் சாதனையாகவும் பறைசாற்றிக் கொண்டார். எந்தக் கட்சியும் அதன் தலைவரும் அரசியல் ஆதாயம் தேட முனைவதில் தவறில்லைதான். ஆனால் அதற்காக ஒடுக்கப்பட்ட அருந்ததியர் மக்களின் போராட்ட வரலாற்றையும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் அருந்ததியர் அமைப்புகளின் பங்கையும் பற்றியும் கோடிட்டுக்கூடக் காட்டாமல், தானே கோரிக்கை வைத்ததாகவும், தானே நிறைவேற்றிக் கொண்டதாகவும் பறைசாற்றுவது அவருக்கும், அவரது இயக்கத்திற்கும் சுயபெருமையாக இருக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியின் ஏற்பாட்டின் பேரில் நடத்தப்பட்ட இந்த பாராட்டு விழாவில் பங்கேற்றவர்கள் கூட முதல்வரின் கூற்றை முற்றாக ஏற்றிருக்க மாட்டார்கள்.  (7.12.09)


(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).