திங்கள், 31 மே, 2010

புதுக்கோட்டையில் எழுச்சிக் கோலம் தீண்டாமைஒழிப்பு முன்னணி முதல் மாநில மாநாடு துவங்கியது



கொழுந்துவிட்டெரியும் சாதியத்திற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு கள இயக்கங்களை வீறு கொண்டு நடத்திவரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாடு புதுக்கோட்டையில் வெள்ளியன்று மிகுந்த எழுச்சியுடன் துவங்கியது.

புதுக்கோட்டையில் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி நினைவரங்கத்தில் துவங்கிய இம்மாநாட்டின் முதல் நிகழ்வாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப் பட்ட தியாகிகள் ஜோதி பெற்றுக் கொள்ளப்பட்டது.

நாகை மாவட்டத்தில் இருந்து வெண்மணி நினைவாக கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - வர்க்க ஒற்றுமை ஜோதியை அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் பெற்றுக் கொண்டார். திருப்பூர் இடு வாய் ரத்தினசாமி நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு - மக்கள் ஒற்றுமை ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.வரதராஜன் பெற்றுக் கொண்டார். மதுரை மாவட்டம் மேல வளவு முருகேசன் நினைவாக கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு ஜோதியை சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா பெற்றுக் கொண்டார். அதிர்வேட்டுகள் முழங்க ஜோதிப் பயணக்குழுவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு தலைவர்கள் மற்றும் மாநாட்டு பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

மாநாட்டிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.லதா, எஸ்.கே.மகேந்திரன் மற்றும் பி.சுகந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். வரவேற்புக்குழுத் தலைவர் எல்.பிரபாகரன் வரவேற்றார்.

அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கே.வரதராசன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். பஞ்சமி நில மீட்புக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் வி.கருப்பன், சாட்சியம் இயக்குநர் கதிர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பா ளர் பி.சம்பத் அறிக்கை சமர்ப்பித்தார்.

இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் என்.வரதராஜன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலப்பொதுச்செயலாளர் உ.வாசுகி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், மார்க்சிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன், ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் இரா.அதியமான், தமிழ்நாடு அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநிலத்தலைவர் கு.ஜக்கையன், தமிழ்நாடு அருந் ததியர் சங்க தலைவர் அரு.சி.நாகலிங்கம், அருந்ததியர் மகாசபை தலைவர் மரியதாஸ், களம் அமைப்பாளர் பரதன், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவை ஏ.எஸ்.பௌத்தன், புதுச்சேரி தலித்சுப்பையா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாடு தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையன்றும் நடைபெறு கிறது.