செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கோபி அருகே அருந்ததியர்கள் மீது கொடூரத்தாக்குதல்: ஆட்சியரிடம் முறையீடு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம் ஏழூரில் அருந்ததிய மக்கள் 4 பேர் மீது ஆதிக்க சாதியினர் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி வட்டத்தில் உள்ளது புள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமம். இதையடுத்த ஏழூரில் சுமார் 150 அருந்ததிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 29.12.09 அன்று அச்சமூகத்தை சேர்ந்த ஒருவர் சாலை

யோரம் சிறுநீர்கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த அரவை மில் உரிமையாளர் ஒருவர் அவரை சாதிப் பெயரை கூறி தரக்குறைவாக திட்டியதுடன் கொலைமிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் என்று ஆதிக்க சாதியினர் தலித் மக்களை மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் சமாதான பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத தலித் மக்கள் 4 பேர் மீது 15 பேர் கொண்ட ஆதிக்கசாதிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட அவர்கள் நால்வரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 15 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று கோரியும் பாதிக்கப்பட்ட அருந்ததிய இன மக்கள் பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்பிரச்சனை காரணமாக தாங்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருவதாக தலித் மக்கள் கூறினர். எனவே, மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், தங்கள் உயிருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 11.01.10 திங்களன்று அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளாவர். அவர்கள் ஆதிக்க சாதியினரின் தோட்டங்களிலும், வயல்களிலுமே வேலைபார்க்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஆனால் தற்போது இச்சம்பவம் காரணமாக பெரும் பாலும் ஆதிக்கசாதியினர் வேலை கொடுக்க மறுத்து விடுவதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.