புதன், 10 பிப்ரவரி, 2010

பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குக! : தலைமைச் செயலாளரிடம் டில்லிபாபு எம்எல்ஏ மனு

தமிழகத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் 36 வகையான பழங்குடியின மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பழங்குடியின சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இவர்களுக்கு உடனே எஸ்.டி இனச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு தலைமைச் செயலாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு செவ்வாயன்று (12.01.2010 )மனு அளித்தார்.

பழங்குடி இன மக்களில், குறிப்பாக குருமன்ஸ், கொண்டாரெட்டி, காட்டு நாயக்கன், மலைவேடன், ஆதியன் போன்ற பிரிவினர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வேலூர், மேட்டூர், வாணியம்பாடி, பாலக்கோடு ஆகிய மாவட்டங்களில் சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. அதேபோல், மதுரை மாவட்டத்தில் மலைவேடன், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி பகுதிகளில் காட்டு நாயக்கன் திருவாரூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஆதியன் போன்ற பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் புதியதாக வழங்கப்படுவதில்லை. மேலும், பெற்றோர்கள் கடந்த காலங்களில் பழங்குடியின (எஸ்.டி) சாதிச்சான்றிதழ் பெற்றிருந்தால் மெய்த்தன்மையறிவது என்றும் சான்றிதழ் சரிபார்ப்பது என்றும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பழங்குடியினர், பெண்கள், உயர்கல்வி படிப்பதும், வேலைக்குச் செல்வதும் அரிதாகவே காணப்படுகிறது. அரசின் உதவித்திட்டங்களை பெற முடியாமல் பரிதவிக்கின்ற நிலை நீடிக்கின்றது.

மாவட்ட விழிக்கண்குழு கமிட்டி, எஸ்.டி., சான்றிதழ், மெய்த்தன்மையறிந்து மூவர் குழு இறுதியாக செய்திட்ட பிறகு, சான்றிதழ் பெற்றுள்ள பெற்றோர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட விண்ணப்பித்தால் திருப்பத்தூர் - சிவகாசி போன்ற கோட்டங்களில் பணியாற்றும் சாராட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திட்டமிட்டே சான்றிதழ் தரமறுக்கின்றனர்.

அதேபோல், குறவன் இனமக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழ் - வேலூர் மாவட்டத்தில் வாலாஜா, அரக்கோணம், திருப்பத்தூர் போன்ற வட்டங்களில் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகிறது. மேலும், வாலாஜாவில் வழங்கியுள்ள நிரந்தர இனச்சான்றிதழ், பள்ளி படிப்பிற்காக மட்டும் இச்சான்றிதழ் என்று எழுதப்பட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும். பெற்றோர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றுள்ள பிள்ளைகளுக்கு உடனடியாக 15 நாட்களிலேயே சாதிச்சான்று வழங்கிட வேண்டும். குறவன் இனமக்களுக்கு (பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் ஆதிதிராவிடர் இனச் சான்றிதழை வேலூர், (அரக் கோணம், வாலாஜா ) திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உடனடியாக வழங்கிட வேண்டும்.

மாணவர்களுக்கான சாதிச்சான்றிதழ் தருமபுரி மாவட்டத்தில் வழங்கப்படுவது போல அந்தந்தப் பள்ளிகளிலேயும் சாதிச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கிட திட்டமிட்டு மறுக்கும் ஒரு சில அதிகாரிகள் குறித்து அரசு - அரசாணை மேற்கொண்டு பரிசீலனை செய்திட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டில்லிபாபு தலைமையில் தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்புத் தலைவர் சிவலிங்கம், குறவன் பழங்குடியின மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் ஏ.வி.சண்முகம், குருமன்ஸ் சங்க பொதுச் செயலாளர் பி.வீரபத்திரன், கொண்டாரெட்டிஸ் சங்க பொதுச்செயலாளர் பிரகாஷ், ஜி.பெருமாள், ஜீ.அரங்கநாதன் ஆகியோர் கொண்ட குழு மனுவை அளித்தது.