புதன், 10 பிப்ரவரி, 2010

தலித் உரிமைப் பாதுகாப்புச் சட்டங்களும், ஊடகங்களும்- கி.இலக்குவன்

தலித் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அது தீண்டாமைக் கொடுமைக்கு முடிவு கட்டுதல் தொடங்கி அருந்ததியர் உள்ஒதுக்கீடு, அனைத்து ஆலயங்களிலும் தலித்துகளுக்கு அனுமதி, இரட்டைக் கிளாஸ்முறை ஒழிப்பு, தலித்துகளுக்கு மயானவசதி ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காகவும் போராடி வருகிறது.

தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்து நாளிதழின் வாசகர்களுக்காக, தலித்துகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களைப் பற்றியும் அவை முறையாக அமல்படுத்தப்படாமல் இருப்பதைப் பற்றியும் 21-12-09 இதழில் ஆசிரியர் எஸ்.விசுவநாதன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்த கட்டுரை, வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள பிரதிபலிப்புகளையும், அவர் தமக்காக ஒதுக்கப்பட்டுள்ள பத்தியில் (28-12-09-இந்து நாளிதழ்) பதிவு செய்துள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பதற்குக் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒருவகையான விளக்கத்தை அளிக்கின்றனர். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் போதுமானவையாக இல்லை என்பது அவர்கள் முன்வைக்கும் வாதம். ஆனால் அது உண்மையல்ல. பார்க்கப்போனால் எஸ்.சி, எஸ்.டி.பிரிவினருக்கு இழைக்கப்படும் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் ஒரு வல்லமைமிக்க சட்டமே. அந்த சட்டத்தைப் பயன்படுத்தி தலித்துகளுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது மட்டு மின்றி, அந்த சட்டத்தை அமல்படுத்த மறுக்கும் அதிகாரிகளின் மீதும்கூட நடவடிக்கை எடுக்க முடியும். சில சூழ்நிலைகளில் மாவட்ட ஆட்சியாளர் மீதுகூட நடவடிக்கை எடுக்கலாம். எனவே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகள் கிடைக்காமலிருப்பதற்கு காரணம், சட்டத்திலுள்ள பலவீனம் அல்ல.

அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு தீண்டாமைக்குத் தடைவிதிக்கிறது. அரசியல் அமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து, 1955ல் தீண்டாமைக் குற்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இச்சட்டம் கோயில் தீண்டாமைச்சட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆலயங்களுக்குள் தலித்துகளை அனுமதிக்க மறுப்பதானது தீண்டாமைக் கொடுமைகளுக்குள் ஒரு மிகப்பெரும் கொடுமையாக உள்ளது. தீண்டாமைக்கு ஆதரவாகப் பேசுவதையும் அதை நடைமுறையில் அனுசரிப்பதையும் தண்டனைக்குரிய குற்றங்களாக 1955 சிவில் உரிமைகள் சட்டம் ஆக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமைக்குத் தடை விதித்துள்ளதை அடுத்து மக்கள் பெறக் கூடிய உரிமைகளும் சிவில் உரிமைகளாக அச்சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் வேறு பல உரிமைகளும் இந்த சிவில் உரிமைகள் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1989ல் ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில், 1989 எஸ்சி, எஸ்டி பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. தலித்துகளுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் 1989 சட்டம் அமைந்திருந்தது. அது முறையாக அமல்படுத்தப்பட்டிருந்தால் களச்சூழலில் அது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

தலித்துகளுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளின் அவல நிலையை மத்திய அரசின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான பி.எஸ்.கிருஷ்ணன் பின்வருமாறு விளக்கியுள்ளார். 1999 முதல் 2003 வரையிலான காலத்தில் தலித்துகள் அளித்த புகார்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலானவைக்குத்தான் குற்றப்பத்திரிகைகள் அளிக்கப்பட்டன. அவற்றில் விசாரணை நிலையை எட்டியவை 8 முதல் 21 சதவீதம் வரையிலானவையே. விசாரிக்கப்பட்ட வழக்குகளிலும் 11 முதல் 13 சதவீதம் வரையிலானவற்றில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன. நீதிமன்றத்துக்குச் சென்ற அனைத்து வழக்குகளையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், 1 முதல் 2 சதவீதம் வழக்குகளில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன (ஆதாரம்: பிரன்ட்லைன் 4-12-09)

வேலை அளிக்க மறுப்பது போன்ற பொருளாதாரக் குற்றங்களையும், சமூகப்புறக்கணிப்பு போன்றவற்றையும் தண்டனைக் குரிய குற்றங்களாக்கக்கூடிய விதிகள் 1989 சட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனால் இதற்கான அடிப்படைத் தவறு சட்டத்தில் இருப்பதாகக் கூறமுடியாது. சமூக அமைப்பில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சிந்தனைகளும் கோட்பாடுகளுமே இவற்றைத் தீர்மானிக்கின்றன. அதன் தாக்கத்துக்கு உட்பட்டவர்களாகவே காவல்துறையும் அதிகார வர்க்கமும் இருந்து வருகிறது.சமூக அக்கறையுள்ள இதழியலாளர்களுக்கு இது பெரும் சவாலாக உள்ளது என்று விசுவநாதன் சுட்டிக்காட்டுகிறார்.

சமூக ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளைப் பற்றிய செய்திகளை மட்டும் வெளியிடுவதுடன் ஊடகங்கள் நின்று விடக்கூடாது. சமூக நீதி மற்றும் முற்போக்கான சமூக மாற்றங்களுக்கான பிரதிநிதிகளாக ஊடகங்கள் பணிபுரிய வேண்டும் என்றும் விசுவநாதன் வலியுறுத்தி யுள்ளார்.