அறிவியல் அடிப்படை ஏதுமற்று முப்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்துவரும் சாதிய சமூக அமைப்பில், கீழ்நிலையில் வாழ்ந்து வரும் அருந்ததியர் மக்களின் உள் இடஒதுக்கீட்டுக்கான சமூகநீதிப் போராட்டம் கடந்த கால் நூற்றாண் டுக்கு முன்னால் முகிழ்த்து விவாதப்பொருளாகி, மக்கள் கோரிக்கையாக மாறி, உள் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் அடிநாதம் வெற்று சாதி உணர்வல்ல, அது சனநாயக அடிப்படையிலானது என்று தியாகத்தழும்புகளால் உருவேறிய மார்க்சிஸ்ட் கட்சியால் அரசியல் கோரிக்கையாக மாற்றப்பட்டு இன்று அருந்ததியர் மாணவர் கரங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த கோரிக்கை கடந்துவந்த பாதை அவ்வளவு எளிதானதும் குறுகியதும் அல்ல.
பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்திலேயே புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் உறுதி செய்யப்பட்டு விட்டாலும், பட்டியலிடப்பட்ட சாதியினருக்கென வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அனைத்து பட்டியலிடப்பட்ட சாதியினர்களுக்குள் சமமாக பகிர்ந்து கொள்ளப்படவில்லை. பட் டியலிடப்பட்ட சாதிகளிலேயே ஓரளவு முன்னேறிய சில சாதிகள் மட்டுமே இடஒதுக்கீட்டின் பலனை நுகர்ந்து வந்ததால், வஞ்சிக்கப்பட்ட சகோதர சாதிகள் தங்களுக்கென தனி உள்இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம் முழுமையுமே இதுபோன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
குறிப்பாக பஞ்சாப்பிலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை வெகுவீச்சாக முன்னெடுக்கப்பட்டு, பஞ்சாபிலும் ஆந்திராவிலும் உள் இடஒதுக்கீடு சட்டமாகவே மாறியது. தமிழகத்தில் இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட அருந் ததியர்கள் உள் இடஒதுக்கீடு கோரினர். தமிழகத்தில் 1984ம் ஆண்டில் கோவையில் நடைபெற்ற “இளைஞர் வழிகாட்டும் பணி” என்கிற அமைப்பின் மாநாட்டில், உள் இடஒதுக்கீடு கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் நாமறிந்த வகையில் அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுக்கான முதல் கோரிக்கையாகும்.
பத்து ஆண்டுகளாக அருந்ததியர் மக்களுக்குள்ளாகவே சுழன்று வந்த கோரிக்கை, 1994ம் ஆண்டு வாக்கில் சமூகநீதி இயக்கங்களால் பேசப்பட்டது. 1999-2000 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களின் சக்திக்குட்பட்ட போராட்டங்களால் சக தலித் இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. 2004 - 2005 ஆண்டுகளில் ஆதித்தமிழர் பேரவை உள் இடஒதுக்கீடு கோரி மாநாடுகளையும் பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்த தொடங்கி, உள்இடஒதுக்கீடு கோரிக்கை போராட்டக்களத்துக்கு மாறியது.
2006ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அருந்ததியர் சமூக பொருளாதார மாநாட்டின், “அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடிமூட்டையாக வாழும் அருந்ததியர்களின் சமூக பொருளாதார விடுதலைக்காக விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டி போராடும்” என்கிற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் விடுத்த அறை கூவல் அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் மைல்கல்லாகும்.
2007ம் ஆண்டு ஜூன் 12ல் சென்னை மாநகரை குலுக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த “அருந்ததியர் சமூக பொருளாதார உரிமைப்பேரணி” சமூக அரங்கில் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கைக்கு வலுசேர்த்ததோடு ஆட்சியாளர்களின் காதுகளுக்கு உள்இடஒதுக்கீடு கோரிக்கை எட்டிய, வரலாற்றில் குறித்து வைக்கத்தக்க நாளாக மாறியது. பேரணி முடிவில் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்களை சந்திப்பதாக இருந்த தமிழக முதல்வர், தில்லிப்பயணம் காரணமாக பேரணிக்கு முன்னதாகவே தலைவர்களை சந்தித்தார். அழைப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் என்றாலும், அதியமான், ஜக்கையன் உள்ளிட்ட அருந்ததியர் தலைவர்களை உடன் அழைத்துச்சென்ற அரசியல் பண்பாடு, ஒடுக்கப்பட்ட மக்களின்பால் மார்க்சிஸ்ட் கட்சி கொண்டிருக்கிற பூடகமும் வேடமும் இல்லாத வர்க்கப்பாசத் தை அருந்ததியர்கள் என்றென்றும் நினைவு கூரத்தக்கவர்கள்.
அதே ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டுக்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் அருந்ததியர்கள் மட்டுமல்லாது உழைப்பாளி மக்கள் வர்க்கப்பாசத்துடன் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டு கைதாகினர். 2008-ம் ஆண்டு சனவரி 23-ல் தமிழக அரசு ஆளுநர் உரையில், அருந்ததியர் உள்இடஒதுக்கீடு வழங்க அனைத்துக்கட்சிகளின் கூட்டம் கூட்டப்பெறும் என அறிவித்தது.
இதற்கிடையில், பல்வேறு அரசியல் கட்சிகள் ஒடுக்கப்பட்டோரை மாத்திரம் வைத்து ஒடுக்கப்பட்டோர் பிரிவு நடத்திக் கொண்டிருக்கையில், வர்க்க வெகுஜன அரங்கங்களை உள்ளடக்கி, மதுரையில் தியாகவேங்கை லீலாவதி அரங்கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியை மார்க்சிஸ்ட் கட்சி அமைத்தது.
12.02.2008ல் தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், தமிழக அரசு 2.35 சதவீத இடஒதுக்கீடு தர தயாராய் இருப்பதாக சொன்னபோது, 2.35 சதவீதம் நியாயமான அளவாக இருக்காது என்று ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் அவர்கள் ஆதாரங்களோடு போராடியபொழுது, அவரோடு தோள்நின்று போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. அதன் விளைவாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணையத்திடம் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அருந்ததியர் இயக்கங்களும் மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்தனியாக சந்தித்து ஆவணங்களை வழங்கின. ஆணையம் அளித்த பரிந்துரையின் பேரில் அமைச்சரவைக்குழு அமைக்கப்பட்டு அமைச்சரவைக்குழு ஏற்றுக் கொண்டபின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மசோதாவாக முன்வைக்கப்பட்டு சட்டமாக மாறி 2009-2010ம் கல்வியாண்டிலேயே அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் சுருக்கமான, உண்மையான வரலாறு இவ்வாறிருக்க, கடந்த டிசம்பர் 5ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சில அருந்ததியர் அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் அருந்ததியர் உள்இடஒதுக்கீட்டு கோரிக்கையை யாரும் என்னிடத்தில் வைக்கவில்லை, அது எனக்கு நானே வைத்துக்கொண்ட கோரிக்கை என்று பேசியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, அருந்ததியர் உள்இடஒதுக்கீடு குறித்து பரிசீலித்து பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார்த்தனம் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்படுகிறது என சட்டமன்றத்தில் பேசியது இன்றும் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் உள்ளது. ஆனால் உண்மையை மறைத்து, யாரும் என்னிடம் கோரிக் கை வைக்கவில்லை என்று சொல்லும் தமிழக முதல்வர், 2007 ஜூன் 12க்கு முன்பு இக்கோரிக்கை தொடர்பாக தமிழக அரசோ தி.மு.கவோ பேசியதாக ஆதாரம் காட்ட முடியுமா? தமிழக முதல்வரின் பாணியிலேயே நாம் பணிவோடு நினைவுபடுத்துகிறோம் 2007 ஜூன் 13ம் நாளிட்ட முரசொலி நாளிதழ் இதற்கு பதில் சொல்லும்.
இதுவே, தமிழகத்தின் சமூக அமைப்பில் அதிகாரம் பெற்று விளங்கும் மேல்..? சாதிகளில் ஒன்று நடத்துகிற பாராட்டு விழா வில், யாரும் கோரிக்கை வைக்கவில்லை என்று உண்மையை மறைக்க முடியுமா? தமிழக முதல்வரின் உண்மை மறைப்பை கண்டிக்கவும், கிராமப்புறங்களில் ஏவப்படும் வன்கொடுமைக்கு இணையான “மென்கொடுமைக்கு” எதிர்வினையாற்றவும் ஒரேவழி, அருந்ததியர் அமைப்புகள் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவையில் சனவரி 24-ல் எடுக்கப்படும் பாராட்டு விழாவில், வெகுவாரியாக அருந்ததியர் பெருமக்கள் கலந்துகொண்டு வெற்றியடையச் செய்வதும் உண்மையான சமூகநீதிப் போராட்டத்தை கூடுதல் குறைவு இன்றி பதிவு செய்வதேயாகும்.
அருந்ததியர் விடுதலைப் போராட்டத்தின் ஒரு மைல்கல்லான உள் இடஒதுக்கீடு பெற்றுத் தந்ததற்காக மாத்திரம் நடத்தப் பெறும் பாராட்டு விழா அல்ல. ஆதிக்க சாதியென அடையாளம் காட்டப்படும் சாதியில் பிறந்து சக்கிலியர்களுக்கு ஆதரவாக இருந்ததனால் படுகோரமாக கொலை செய்யப்பட்ட தியாகி இடுவாய் ரத்தினசாமியின் வீரஞ்செறிந்த போராட்டம், அது தனிப்பட்ட ரத்தினசாமியின் குணநலன்களால் மாத்திரம் விளைந்தது அல்ல. ரத்தினசாமியை அவ்வாறு வார்த்தெடுத்த மார்க்சிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய கட்சித்திட்டத்தின் விளைவே!
இன்றைக்கும் “வாழும் ரத்தினசாமிகள்” மார்க்சிஸ்ட் கட்சியில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நாம் கண்ணார பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த பாராட்டு விழா அந்த “வாழும் ரத்தினசாமிகளை” ஊக்கப்படுத்தும் ஒரு சிறு முயற்சியுமாகும்.
இரக்கப்பட்டு உச்சுக் கொட்டிய வாய்களுக்கு இடையில், தியாகத் தழும்புகளால் உருவேறிய முதிர்ந்த கரம் ஒன்று மார்க்சிஸ்ட் கட்சியாக அருந்ததியர்களை தூக்கிவிட வந்திருக்கிறது. கரத்தை வலுவாகப் பற்றிக்கொண்டு விடுதலைப் பாதையில் முன்னேறுவோம்!
- (தீக்கதிர், 24.01.2010)
புதன், 10 பிப்ரவரி, 2010
சிபிஎம் கரத்தைப் பற்றி முன்னேறுவோம்! - நீலவேந்தன் (ஆதித்தமிழர் பேரவை)
லேபிள்கள்:
ஆதித்தமிழர் பேரவை,
கோவை பாராட்டு விழா,
தீக்கதிர்,
நீலவேந்தன்