தண்ணீர் கேட்டு போராடிய தலித் மக்கள் மீது தடியடி நடத்திய, வேடசந்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மகேஸ் வரனை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் என்.பாண்டி விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பாலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது, புது அழகாபுரி. இங்குள்ள ஆதி திரா விடர் குடியிருப்புப் பகுதிக்கு, கடந்த எட்டு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை; மின்சாரம் இல்லை; இதனால், பொங்கல் நாட்களில் கூட அந்த மக்கள் நிம்மதியாக சமைத்துச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆவேசமடைந்த தலித் மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் ஆண்களும் பெண்களுமாக திரண்டு, புதனன்று காலையில் சாலையில் நின்று முழக்கமிட்டுள்ளனர். கூம்பூர் காவல் துறையினரும், வேடசந்தூர் காவல் ஆய்வாளரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பொதுமக்களோடு பேசித் தீர்வு ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
அப்போது அங்குவந்த வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரன், வாகனத்தை விட்டு இறங்கியவுடன் யாரிடமும் எந்த விசாரணையும் செய்யாமல், இவனை அடித்து தூக்கினால் எல்லாம் தீர்ந்து விடும் என்று கூறிக்கொண்டே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் சு.பாலுபாரதியை தடியால் கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தாக்கிய உடன் அங்கிருந்த காவலர்களும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பாலுபாரதி மயக்கமடையவே, அவரை வாகனத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றுவிட்டனர்.
அதைத்தொடர்ந்து, பாலுபாரதியை விடுவிக்காமல் கலைந்து செல்லமாட்டோம் என்று தலித் மக்கள் உறுதியுடன் இருந்துள்ளனர். இதனிடையே, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.பாலபாரதி, சம்பவ இடத்திற்குச் சென்று, பிரச்சனையில் தலையிட்ட பிறகு, பாலுபாரதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தலித் மக்கள் தண்ணீர் கேட்டதற்காக, அதற்கு தலைமை தாங்கிய வாலிபர் சங்க நிர்வாகி சு.பாலுபாரதியை மனிதாபிமானற்ற முறையில் கடுமையாக தாக்கிய வேடசந்தூர் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மகேஸ்வரனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமென மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்டச் செயலாளர் என்.பாண்டி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கும், திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் புகார் மனு அனுப்பட்டுள்ளது.
புதன், 10 பிப்ரவரி, 2010
தலித் மக்களுக்கு குடிநீர் கேட்டால் தடியடியா? காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
லேபிள்கள்:
காவல்துறை,
சு.பாலுபாரதி,
தலித் மக்கள்,
தாக்குதல்,
வேடசந்தூர்