புதன், 10 பிப்ரவரி, 2010

சாமி கும்பிடச் சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல்:தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது உளுத்திமடை கிராமம். பல்வேறு சமூகத்தினர் வாழ்ந்துவரும் இங்கு, செங்கமடை என்ற பகுதியில், ஊருக்குப் பொதுவான அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் தலித் மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில், ஆதிக்க சாதியினரின் தடையை மீறி, கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவதென முடிவு செய்து, அதன்படி, கடந்த 15.1.2010 அன்று தலித் மக்கள் கோயிலுக்கு சென்றனர்.

அப்போது, செங்கமடை மனோகரன் என்பவரின் தலைமையில் ஏராளமான ஆதிக்க சாதியினர், தலித் மக்களை கொடூர மான ஆயுதங்கள் மூலம் கடுமையாக தாக்கினர். முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர். முத்துப்பாண்டி, லட்சுமி, பஞ்சயம்மாள் ஆகியோர் உட்பட பலர் காயமடைந்தனர். முத்துப்பாண்டி என்பவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, அதற்கு மாறாக, தாக்குத லுக்கு உள்ளான பெண்கள் உட்பட தலித்துக்கள் பலரை, சிகிச்சை பெறக்கூட அனுமதிக்காமல் இரவோடு இரவாக கைது செய்துள்ளது. தலித் மக்கள் 11 பேர் மீது வழக்கும் பதிவும் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, காவல் ஆய்வாளர், தலித் பகுதிக்கு இரவு நேரத்தில் சென்று அங்குள்ள பெண்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதுஒருபுறமிருக்க, உளுத்திமடையில் உள்ள கடைகளில், தலித் மக்கள் பொருட்கள் வாங்க ஆதிக்க சாதியினரால் தடை ஏற் படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே இங்குள்ள டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை தற்போதுவரை நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா காலங்களில் நாடகம் நடைபெற்றால் தலித் மக்கள் சமவரி கொடுத்தாலும், கடைசி வரிசையில் அமர்ந்து தான் பார்க்க வேண்டுமாம்; வரி தரவில்லையெனில் வீடு புகுந்து அவர்கள் வேலைக்காக பயன்படுத்தும் மண் வெட்டி, கத்தி, அரிவாள், பானை போன்ற பொருட்களை எடுத்துச் சென்று விடுவார்களாம்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால், இங்குள்ள தலித் மாணவர்கள், பள்ளிக்கு செல்லக்கூட பயந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஏனெனில், இங்கு பள்ளிக்கூடமும்கூட ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில்தான் உள்ளது.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர்கள் ஏ.பி.கண்ணன், வி.முருகன், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பூங்கோதை, மாவட்டத் தலைவர் சி.ஜோதிலட்சுமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.சரோஜா, பூமிநாதன், அன்புச்செல்வன் ஆகியோர் உளுத்திமடை கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், பிரச்சனைகளைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் நம்பிக்கை ஊட்டினர்.

சாமி கும்பிட கோயிலுக்கு சென்ற தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது; பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை காவல் துறை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்; வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.சாமுவேல்ராஜ், 20.1.2010 அன்று அறிக்கையொன்றையும் விடுத்துள்ளார்.