விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்டவனுக்கு அருகே நின்று பூஜை செய்யும் உரிமையை திமுக அரசு பெற்றுத் தந்துள்ளது என்று தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பிற்கு நேர் எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் திருக்கோ விலூர் வட்டம் காங்கியனூரில் நடைபெற்றுள்ளது. தலித் மக்களைத் திரட்டி ஆலய நுழைவுக்கு சென்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் சிபிஎம் தலைவர்களைத் தடுத்து நிறுத்தியதோடு காவல்துறையினர் தடியடியும் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மாவட்ட காவல்துறை, வருவாய் துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை இதுவரைக்கும் எடுக்கப்படவில்லை. ஆனால் உரிமையை நிலைநாட்டச் சென்றவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
கல்வராயன்மலை, வாரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் தி.தேவராஜ் பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவரது படுகொலையில் உண்மை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. பாணப்பட்டு கிராமத்தில் தலித் இளைஞர் பி.சிவபாலன் கொலையை காவல்துறையே தற்கொலை என திசை திருப்புகிறது.
எனவே, காங்கியனூரில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; தேவராஜ் படுகொலையில் உண்மை குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்; சிவபாலன் கொலைச் சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முழுமையாக தலித் மற்றும் பழங்குடியின மக்க ளுக்கே செலவிட வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில அமைப்பாளர் பி.சம்பத் கண்டன உரையாற்றினார். ஆர்.ராமமூர்த்தி சாரங்கன் (வழக்கறிஞர் சங்கம்), ஜி.ஆனந்தன் (சிபிஎம்), சி.நிக்கோலஸ் (அம்பேத்கர் பேரவை), எல்.யேசுமரியான் (அம்பேத்கர் நூற்றாண்டு இயக்கம்), ஏ.கோதண்டம் (பார் கவுன்சில்), வி.உதயகுமார், பி.குமார் (சிஐடியு), டி.ஏழுமலை, ஆர்.தாண்டவராயன், என்.சுப்பிரமணியன் (விவசாயிகள் சங்கம்), கே. கலியன், பி.சுப்பிரமணியன் (விதொச), ஆர்.கண்ணப்பன், எம்.செந்தில் (வாலிபர் சங்கம்), ஏ.சக்தி, எஸ்.கீதா (மாதர்), ஜெ.முகமது அனஸ், யு.கார்க்கி (மாணவர்), ஆர்.மதி (அருந்ததியர் சங்கம்) மற்றும் பலர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
புதன், 10 பிப்ரவரி, 2010
தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
லேபிள்கள்:
ஆர்ப்பாட்டம்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
பி.சம்பத்,
விழுப்புரம்