புதன், 10 பிப்ரவரி, 2010

ஒரே நாளில் சாதிச் சான்றிதழ்: இருளர் இன மக்கள் நன்றி

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், ஒரேநாளில் விசாரணை செய்து, உடனடியாக இருளர் இன மக்களுக்கு வீடு வீடாக சென்று சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கரடிப்புத்தூர் ஊராட்சியில் உள்ள கோபால்ரெட்டி கண்டிகையில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள், ஆரம்பக் கல்வி, உயர்கல்வி கற்க சாதிச் சான்றிதழ் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இதில் ஒரு சிலர் உயர்கல்வி கற்றாலும், அவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவியும் கிடைப்பதில்லை. சாதிச்சான்று இல் லாமல் எந்த அரசு உதவியும் கிடைப்பதில்லை. பல குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா இல்லை. அரசு வழங்கும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகளும் இன்னும் வந்து சேரவில்லை.

இந்த நிலையில் அங்கு வாழும் இருளர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயதென்னரசு தலைமையில் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர்.

3 மணி நேரத்தில் சாதிச் சான்று

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் கடந்த வாரம் கோபால் ரெட்டி கண்டிகைக்கு சென்று இருளர் இன மக்களிடம் விசாரணை செய்தனர். அதன் பிறகு அந்த இடத்திலேயே சாதிச்சான்றிதழ் தயார் செய்து 3 மணி நேரத்தில் 24 நபர்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினர்.

இரவு நேரம் ஆனதால் தீப்பந்தம் ஏந்திக் கொண்டு பொன்னேரி ஆர்டிஓ குமார் வீடு, வீடாக சென்று சான்றிதழ் வழங்கினார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் முனியசாமி உடனிருந்தார்.

ஒரு சில மணி நேரத்திலேயே சாதிச்சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.