வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் வாழ்ந்து வரும் குருமன்ஸ் பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் (எஸ்டி) வழங்க வேண்டும் என்று பி.டில்லிபாபு எம்எல்ஏ வலியுறுத்தினார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளரை சந்தித்து அவர் மனு அளித்தார்.
அதன் விபரம் வருமாறு:-
தமிழகத்தில் பழங்குடியின பட்டியலில் குருமன்ஸ் பிரிவு வரிசை எண். 18ல் உள்ளது. இவர்களுக்கு குருமன்ஸ் பழங்குடி இனச் (எஸ்.டி) சான்றிதழ் அரூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் வழங்கப்பட்டு வருகின்றன.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே, சான்றிதழ் பெற்றிருக்கும் பெற்றோர்களுக்கு மெய்த்தன்மையறிந்து பின்னர் அவர்க ளது பிள்ளைகளுக்கு சாதிச்சான்று வழங்கப்படும் என்று அதிகாரி அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர், கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி தாலுகாகளில் கடந்த 2.5.07 அன்று மாவட்ட விழிப்புணர்வு குழு மூலம் மெய்த்தன்மையறிந்து சான்றிதழ் வழங்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து விழிப்புக்குழுவில் உறுதிசெய்யப்பட்ட நபர்களது பிள்ளைகளுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கிட கோரி மனு செய்ததில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் நந்தகுமார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடன் பதில் சொல்வதும், உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சாதிச்சான்றிதழ் வழங்கிட மறுத்தும் வருகின்றார்.
மேலும், “மாவட்ட விழிப்புக்குழுவின் மெய்த்தன்மை குறித்த அறிக்கை அடிப்படையில் மட்டும் சார் ஆட்சியரால் சாதிச் சான்று மேற்கண்ட நபர்களுக்கு வழங்க இயலாது” என்பது - பழங்குடியினருக்கான இந்திய அரசியல் சட்ட உரிமையை மறுப்பதாகும். மேலும், தமிழக அரசு ஆணைகளை காலில்போட்டு மிதிக்கும் செயலாகும்.
சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் பெற்றோர்கள் எஸ்டி இனச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு பிறகும் திருப்பத்தூர் சார் ஆட்சியரிடத்தில் கடந்த 5 மாத காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்ற அடிப்படையி லும் 3 முறை நேரில் சென்று வலியுறுத்தி பேசியுள்ளேன்.
ஆனால், கோட்டாட்சியர் திட்டமிட்டு குருமன்ஸ் இனத்திற்கு எஸ்.டி. சான்றிதழ் தர மறுத்து வருவது சாதிய இன உணர்வோடு அவர் பணியாற்றுகிறாரா? என்ற சந்தேகத்தை அப்பகுதி பழங்குடி மக்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, இதே போன்று உறுதி செய்யப் பட்ட 28 பேர்களது வாரிசுகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டுமென்று, 12.12.09 அன்று போராட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டது. அப்போது 1 மாதக் காலத்திற்குள் சாதிசான்றிதழ் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரே தெரிவித்துள்ளார்.
எனவே, தலைமைச் செயலாளர் இப்பிரச்சனையில் தலையிட்டு, விசாரணை செய்து குருமன்ஸ் இனமக்களுக்கு குறிப்பாக வேலூர் - திருப்பத்தூர் கோட்டத்தில் சாதிச்சான்றிதழ் வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதன், 10 பிப்ரவரி, 2010
குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்குக : பி.டில்லிபாபு
லேபிள்கள்:
ஆட்சியர்,
எஸ்.டி.சான்றிதழ்,
குருமன்ஸ்,
குறவன்,
சாதிய உணர்வு,
டில்லிபாபு