புதன், 10 பிப்ரவரி, 2010

அருந்ததியர்களின் இன்றைய வாழ்நிலை- ஒரு நேரடி ரிப்போர்ட்

நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உள்ளது திருமலைப்பட்டி ஊராட்சி. இங்கு 60 குடும்பங்கள் வசிக்கும் வண்ணாம்பாறை என்ற அருந்ததியர் கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் மக்களில் 18 வயது முதல் 30 வயது வரையுள்ள இளைஞர்கiளைத் தவிர மற்றவர்கள் விவசாய கூலி வேலைக்குத் தான் செல்கின்றனர். உள்ளூரில் வருடம் முழுவதும் வேலையிருப்பதில்லை. இதனால் கணவன், மனைவி இருவரும் வெளியூருக்கு வேலைதேடி சென்று விடுகின்றனர். வருடத்தில் சுமார் பத்து மாதங்கள் வேலைக்காக வெளியூரில்தான் தங்கி உள்ளனர். நெல் நடவு, களை எடுப்பது, அறுவடை என்றும், மஞ்சள் காட்டிற்கும், கரும்பு வெட்டுவதற்கும், நிலக்கடலை பறிப்பதற்கும் போர் வைப்பதற்கும், சோளத்தட்டு அறுக்கவும், குச்சிக்கிழங்கு பிடுங்கவும் என திருச்சி, கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கேரளா வரை சென்று அங்கேயே தங்கியுள்ளனர். வயதான பாட்டன் பாட்டிகளின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுச் செல்லும் நாடோடித் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை குழந்தைகளைப் பார்க்க வந்து செல்கின்றனர்.

இளைஞர்களும் லாரி மற்றும் ரிக் வண்டிகளுக்கு சென்று விடுகின்றனர். கர்நாடகா முதல் எபிவரை செல்லும் இவர்களும் வருடத்தில் இரண்டு அல்லது மூன்றுமுறைதான் வீட்டிற்கு வருகின்றனர். திருமணமாகாதவர்கள்தான் வெளியூர் வேலைக்கு செல்கின்றனர் என்றால், திருமணமானவர்களும் மனைவி, குழந்தைகளைத் தவிக்க விட்டு சென்றுவிடுகின்றனர். குழந்தைகள் பெறாத சிலரும் மாதக்கணக்கில் வீட்டுக்கு வருவதில்லை. வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் அண்டை வீட்டில் இருப்பவர்கள்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். செல்போனின் தயவால் குரலை மட்டும் கேட்கலாம், நலம் விசாரிக்கலாம் என்பதுதான் சற்று ஆறுதலான விசயம். குழந்தைகளைப் பராமரிக்க வேறு யாரும் இல்லாத
வர்கள் மட்டுமே சொந்த ஊரிலேயே இருக்கின்றனர். அவர்களும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் வரை வேலைக்கு சென்று வருகின்றனர். பெற்றோர்களை பிரிந்து வாழும் குழந்தைகளுக்கும், கணவனை பிரிந்து வாழும் மனைவிகளுக்கும் இதன் பாதிப்புகளை, பிரச்சனைகளையோ உணர்ந்தாலும், அதை சொல்லத் தெரியவில்லை. விடுபட வழியும் தெரியாமல் தலையெழுத்து என்றும், ஆண்டவன் விட்ட வழி என்றும், வலிகள், வேதனைகளோடும், வாழ்ந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதத்திட்டம் உதவாமல் போனதுதான் கொடுமை. அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க வந்த போது ஊரில் ஒருவரும் இல்லை. புகைப்படம் கொடுத்தும் பெயரை பதிவுசெய்து அடையாள அட்டை பெறவில்லை. இதனால் 100 நாள் வேலை உறுதித்திட்டம் இவர்களுக்கு ஏட்டில் எழுதிய சர்க்கரையாகிவிட்டது.

இது ஒருபுறம் என்றால் இங்கு வசிக்கும் 60 குடும்பங்களில் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓலைக்குடிசைகள் தான் வீடுகள். சரியான பேருந்து வசதி இல்லை. அவசர உதவிக்கும், மருத்துவமனைக்கு செல்லவும் 3 கி.மீ நடந்து சென்று பஸ் ஏற வேண்டும். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்றுதான் படிக்க வேண்டும். தேவையான தெரு
விளக்கு வசதி இல்லை. இப்பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இதுதான் நிலை. அடிப்படை வசதிகளும் இல்லாமல், வாழ வழியுமில்லாமல், அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் பயன்பெற முடியாமல் நாடோடிகளாய் திரியும் அப்பாவி அருந்ததிய மக்கள் வாழ்வு வளம்பெறுவது எப்போது….?