செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

தலித் பிணத்தை பொதுப்பாதையில் கொண்டு செல்ல முடியாத அவலம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு பகுதி வளையமாபுரம். இங்குள்ள பொதுப்பாதை வழியாக, தலித்துக்களின் பிணங்களை எடுத்துச்செல்ல, ஆதிக்க சாதியினர் நீண்ட காலமாக தடை விதித்து வைத்துள்ளனர்.

இதையடுத்து, இக்கொடுமையை எதிர்த்தும், தலித் மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமையன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் நிறைவுரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன், முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் கே.ரங்க சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.நாவலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், கே.கைலாசம், ஆர்.லட்சுமி, எஸ்.நவமணி, ஒன்றியச் செயலாளர்கள் கே.சுப்பிரமணியன் (வலங்கைமான்), எப்.கெரக்கோரியா (குடவாசல்), பி.கந்தசாமி (நீடாமங்கலம்), விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் என்.இராதா, வளையமாபுரம் கிராம நிர்வாகிகள் ஜி.ராசு, வி.சேகர், கலியபெருமாள், சாந்தா, லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வலங்கைமான் பயணிகள் விடுதி அருகிலிருந்து 200 பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் வந்தனர்.

தலித் மக்களின் உரிமைகளை தடுக்கும் சட்டவிரோத சக்திகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்தக் கடமையைச் செய்யத் தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் எச்சரித்தனர்.

போராட்டத்தின் போது பெய்த கனமழையையும் பொருட்படுத்தாது எழுச்சியுடன் மக்கள் பங்கேற்றனர். ( தீக்கதிரில் 8.1.2010 அன்று வெளியான செய்தி)