செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

திண்டிவனம் வட்டாரத்தில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில், பலவடிவங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுகிறது.

மயிலம் ஒன்றியத்தில் உள்ள ரெட்டணை கிராமம், வெண்ணியம்மன் கோயிலுக்குள் தலித் மக்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலங்காலமாக தலித்மக்கள் வைக்கும் ஊரணிப்பொங்கல் பானையை உயர்சாதி வகுப்பினர் வசிக்கும் தெருக்களின் வழியாக எடுத்துச் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

ரெட்டணை, நெடி, மோழியனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு சமூகக் கூடங்களிலும், தனியார் திருமண மண்டபங்களிலும் திருமணம், மஞ்சள்நீர் போன்ற சுப காரியங்கள் நடத்த தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நெடி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் ஆலயத்திற்குள் தலித் மக்களை வழிபாடு நடத்த அனுமதிப்பதில்லை. காலங்காலமாக தலித் மக்கள் நடத்தி வந்த தெப்பத் திருவிழாவை நடத்த கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆலகிராமம் நொளம்பூர், பாதிராப்புலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள தலித் மக்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை.

அவ்வையார்குப்பம் மதுரா பெரியாண்டப்பட்டில் உள்ள தலித்துக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை ஆதிக்க சாதியினர் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர்.

பெரமண்டூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்படுகிறது.

இதேபோல் திண்டிவனம் தாலுகா முழுவதிலும் உள்ள பஞ்சாயத்துகளில் பெரும்பாலான தலித் பஞ்சாயத்து தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாத நிலைதான் உள்ளது. அதுமட்டுமல்ல அரசு அதிகாரிகள் மத்தியிலும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மதிக்கப்படுவதில்லை.

எனவே, இத்தகைய கொடுமைகளுக்கு முடிவுகட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், 26.01. 2010 அன்று போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளது.

இதன்படி நெடி கிராமத்தில் உள்ள அய்யானாரப்பன் ஆலயத்தில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செய்வது என்று வாலிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.

முன்னதாக தீண்டாமை ஒழிப்பு ஆயத்த மாநாட்டை, வாலிபர் சங்கம் நடத்தியது. சங்கத்தின் மயிலம் ஒன்றியக்குழுத் தலைவர்ஒன்றிய தலைவர் எம்.கலைச்செல்வன் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.ஆனந்தன் பேசினார். ஒன்றியச் செயலாளர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். ஒன்றிய துணைச்செயலாளர் தே.சத்தியராஜ் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.முத்துக்குமரன், மாவட்டத் தலைவர் ஆர்.கண்ணப்பன், மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், வட்டச்செயலாளர் கே.முனியாண்டி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தலைவர் மணிமாறன், வி.சி.டி.எஸ். நிறுவனர் எஸ்.மார்ட்டின் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் ஆர்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார். ஒன்றிய துணைச்செயலாளர் எஸ்.காளி தாஸ் நன்றி கூறினார்.