விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நெடி கிராமத்தில் 100 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது ஏரியில் இம்மக்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு, அய்யனார் கோயிலில் வழிபடும் உரிமை ஆகியவற்றை ஆதிக்க சாதியினர் மறுத்து வந்தனர்.
இதனை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 30.01.10 அன்று ஆலயத்திற்குள் பொங்கலிட்டு சாமி கும்மிடும் போராட்டம் நடத்தினர். அப்போது கிராம ஆதிக்க சக்தியினர் திரண்டு வந்து பொங்கலை மட்டும் வைக்கலாம்; ஆனால், வழிபாடு நடத்த விடமாட்டோம் என்று கூறி, கோயிலையும் பூட்டி அராஜகம் செய்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 01.02.2010 அன்று சமாதான கூட்டம் நடத்தியது. அப்போது, பிப்ரவரி 5-அன்று பொங்கலிட்டு சாமியை வழிபடுவது என்று கிராம மக்கள் வாலிபர் சங்கத்தின் சார்பில் முடிவு செய்தனர். இதையடுத்து வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று (பிப்.5) மாநிலத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் கிராம மக்களை அழைத்துக் கொண்டு அய்யனார் கோயிலில் பொங்கலிட்டு வழி பாடு நடத்தினர். இந்த போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.முனியாண்டி, ஒன்றியச் செயலாளர்கள் சத்தியராஜ், காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாலிபர் சங்கத்திற்கு பாராட்டு
தங்களது உரிமையை மீட்டுக் கொடுத்த வாலிபர் சங்கத் தலைவர்களுக்கு கிராம மக்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். கிராமத்திற்கு நூலகம் ஒன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக திண்டிவனம் வட்டாட்சியர் பெ.சீத்தாராமன், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் நூற் றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
ஆதிக்கச் சக்திகளின் 50 ஆண்டு தடை தகர்ந்தது! - நெடி கிராம அய்யனார் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு
லேபிள்கள்:
அய்யனார் கோயில்,
நெடி,
வழிபாடு,
வாலிபர் சங்கம்,
விழுப்புரம்