செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

நரிக்குறவர் காலனியில் நிலம் ஆக்கிரமிப்பு

வேலூர் மாவட்டம் சோளிங்கர் கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனி உள்ளது. இந்நிலையில் இக்காலனிக்கு வரும் வழிகளை ஆக்கிரமித்து, ஆதிக்க சாதியினர் வீடுகளைக் கட்டியுள்ளனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், கோட்டாட்சியருக்கும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, நெறிக்குறவர் காலனிக்கான பொது வழி ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வாலாஜா தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.காளப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் ஆர்.குப்புசாமி, நிலவு குப்புசாமி, தா.வெங்கடேசன், எல்.சி.மணி, பத்மா மணி, ஆர்.ரேணு, பெருமாள், ஜோதி உள்ளிட்ட பலர் பேசினர்.
நெறிக்குறவர் சமூகத் தலைவர்கள் ஆர்.கேந்திரராஜ், முருகன் ஆகியோர் தாங்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் கொடுமைகளை விளக்கினர்.  எங்களுக்காக முதன் முறையாக போராடவும், எங்களை பேசவும் வைத்த விவசாயிகள் சங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் கூறினர்.
கொண்டபாளையம் நெறிக்குறவர் காலனியில் வசிக்கும் 43 குடும்பங்களுக்கு, ஆதிக்க சக்திகளின் ஆக்கிர மிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர் அமைக்கக் கோரி வாலாஜா தாசில்தாரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், மண்டல துணை தாசில்தாரை விரைவில் அனுப்பி விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.