திங்கள், 15 பிப்ரவரி, 2010

மிட்டா மிராசுகளிடம் தலித்துகளின் நிலம் வருவாய்த்துறை உதவியுடன் தொடரும் அநீதி - -சி.முருகேசன்

வசதி படைத்தவர்களிடம் உள்ளூர் அதிகாரமும் கிடைத்துவிட்டால் முடிசூடா மன்னர்களாக மாறிவிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக உள்ளது ரெட்டிப்பட்டி. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமையை கூட தட்டிப் பறித்துள்ளனர். தலித்துக்களை ஏழைகளாகவே- தொடர்ந்து தங்களுக்கு சேவகம் செய்யும் நபர்களாகவே நீடிக்க வைத்துள்ளனர். தொடரும் சமூக ஒடுக்குமுறை குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் உள்ளது தலித் கிராமமான ரெட்டிப்பட்டி. பர்கூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கும் வாணிப்பட்டி ஏரிக்கும் மத்தியில் ரெட்டிப்பட்டியை சேர்ந்த தலித் மக்களுக்கு உரிமையுள்ள சுமார் ஐநூறு ஏக்கர் நிலம் உள்ளது. புல எண்கள்: 109, 110, 111, 115, 117, 119, 120 உள்ளிட்ட நிலங்கள், அரசு ஆவணங்களில் தோட்டி மானியம் என குறிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பகுதி மேட்டு நிலமாக இருந்ததால் மானாவாரி விவசாயம் நடைபெற்று வந்தது. விவசாயம் சோறு போடாததால் சில குடும்பங்கள் வெளியூர்களில் பிழைப்பு தேடி சென்றுள்ளன.

ஆனந்தூர் தரப்பிலுள்ள இப்பகுதியின் கிராம நிர்வாகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்தூர் மிராசுதார் துரைசாமி செட்டி குடும்பத்தினரிடம் இருந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி தலித் மக்களின் தோட்டி மானிய நிலங்களை இக்குடும்பத்தினர் கைப்பற்றியுள்ளனர். 1985-ல் இத்தகைய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு யு.டி.ஆர். பட்டாவும் பெற்றுள்ளனர். இதில் அண்ணாமலை மகன் துரைசாமி என்கிற தலித் விவசாயியின் அனுபவத்தில் இருந்த 20 ஏக்கர் நிலமும் உள்ளது.

மிராசுதார்கள் பட்டாவுடன் வந்து நிலங்களுக்கு சொந்தம் கொண்டாடியபோது தலித் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். எதிர்த்து நிற்கக்கூட ஆற்றல் இல்லாத அவர்கள், பட்டாவைக் கண்டு ஒடுங்கிப் போயினர். எதிர்த்து நின்ற ஒரு சிலர் காவல்துறை மற்றும் குண்டர் படையின் தாக்குதலுக்கு உள்ளாகினர். அ.துரைசாமியை காவல்துறை மூலம் கடும் சித்ரவதை செய்து நிலத்தை விட்டு துரத்தியதாக அவரது மகன் ஜெயவேல் கூறினார். இவர்கள் வசித்த வீடு இடிந்து புல் முளைத்துள்ளது. முறைகேடான பட்டாக்களை ரத்து செய்யவும், இதற்கு காரணமான வருவாய் துறையினர் மீது நடவடிக்கை கோரியும் அ.துரைசாமி தொடர்ந்து மனுக்கள் கொடுத்துள்ளார். 2001-ல் தருமபுரி மாவட்டமாக இருந்தபோது ஆட்சியர் கா.பாலச்சந்திரன் பிறப்பித்த ஆணையில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவேண்டும் என கூறியிருந்தார். கிராம நிர்வாகத்தை மிட்டாதார் வகையறாக்கள் தன்வசம் வைத்திருந்ததால் ஆட்சியரின் உத்தரவு மதிப்பிழந்து போனது. ஆனாலும் நிலத்திற்குள் மிராசுதார் குடும்பத்தாரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டமாக மாறிய பிறகு 15.11.2005 தேதியில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புதிய மனு கொடுத்துள்ளார். இதன் மீதான விசாரணை 5 மாதங்கள் கழித்து 5.4.2006 ல் நடந்துள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள் அ.துரைசாமி இறந்தார். வருவாய்த் துறையும் இதில் முடங்கிக் கொண்டது. உடனடியாக மிராசுதார்கள் ஏழரை ஏக்கர் நிலத்தை வெளியூர் நபர்களுக்கு விற்றுள்ளனர். தொடர்ந்து இதர நிலங்களையும் சிறுகச் சிறுக விற்கத் துவங்கினர். கிராமத்தை ஒட்டிய மந்தைவெளி நிலம் கூட இவர்களது ஆக்கிரமிப்பிலிருந்து தப்பவில்லை. கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், இந்த 5 ஏக்கர் நிலத்திற்கு பட்டா போட்டு வைத்துள்ளாராம். முழுவதும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் கிராமமான ரெட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனாலும் மிராசுதார்களின் ஆதிக்கம்தான் எங்கும் நிரம்பி உள்ளது.

இதுகுறித்து இங்குள்ளவர்களிடம் கேட்டபோது, ஆடு, மாடு மேய்க்கக்கூட எங்களுக்கு இடம் இல்லை. எங்க நிலத்தை திருப்பித்தர மாட்டாங்க. அவங்க தயவுல தான் பிழைக்கிறோம். வேலையும் சரி, மாடு கண்ணு மேய்க்கறதும் சரி அவங்கள நம்பி தான் இருக்கிறோம் என்றனர்.

ரெட்டிப்பட்டி கிராமத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்து சில விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜெகதீசன் பெற்றுள்ளார். பல விவரங்களை அளிக்க வருவாய் துறையும், ஆவணகாப்பகமும் காலம் கடத்துவதாக அவர் கூறினார். ஏழைகளின் நலன்களை பாதுகாப்பதாக கூறும் ஆட்சியாளர்கள் ரெட்டிப்பட்டி தலித் மக்களின் நில உரிமையை மீட்டுத் தருவார்களா?

மிராசுதார்களின் மூர்க்கத்தனம்
ரெட்டிப்பட்டியில் தனது தோட்டத்தை ஒட்டி மிராசுதார்களின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு பகுதி நிலத்தை தலித் அல்லாத பொன்னுசாமி, குத்தகைக்கு உழுது வந்தார். சும்மா கிடந்த நிலம் அவரது உழைப்பால் உயிர் பெற்றது. தலித் மக்களுடன் அவர் நெருக்கமானதால் மிராசுதார்கள் ஆத்திரமடைந்தனர். இதையொட்டி நடந்தவற்றை பொன்னுசாமி விவரித்தார்: விளைந்த நெல்லை அறுவடை செய்துவிட்டு வெளியேறுவதாக கூறினேன். ஏற்காத துரைசாமி செட்டியாரும், அவர் குடும்பத்தாரும் ரவுடிகள் துணையோடு என்னை தாக்கினர். என்மேல் கொலை முயற்சி வழக்கு போட்டு ஜெயிலுக்கு அனுப்பினர். இந்த சம்ப வத்தை தலித் மக்களை மிரட்டுவதற்கும் பயன்படுத்திக்கொண்டனர் என்றார்.

நடைபயணம் - ஆர்ப்பாட்டம்:
இந்நிலையில், தங்களின் நிலத்தை மீட்டுத்தரவும், முறைகேடாக பட்டா வழங்கியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி புதனன்று (27.01.2010) ரெட்டிப்பட்டியிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி, தலித் மக்கள் நடைபயணம் மேற்கொள்கின்றனர். வியாழனன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட் டமும் நடைபெற உள்ளது.

(தீக்கதிரில் வெளியான கட்டுரை)