அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கோரி 25 ஆண்டுகாலம் போராடினாலும் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம்தான் வெற்றியைத் தந்தது. பல்வேறு அருந்ததியர் இயக்கங்களை ஒன்றுபடுத்திப் போராடியதும், கோரிக்கையை வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்று அருந்ததியர் அமைப்புகளின் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.
பல்வேறு அருந்ததியர் அமைப்புகளின் சார்பில் கோவையில் ஞாயிறன்று மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில், அருந்ததியர் இயக்கங்களின் தலைவர்கள் பேசியதாவது:
ஆதித்தமிழர் சனநாயகப் பேரவையின்
மாநில அமைப்பாளர் அ.சு.பவுத்தன் :
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, இன்று அருந்ததியர் மக்கள் எழுச்சி கொண்டு வருகிறார்கள். பல்வேறு அரசியல் இயக்கங்கள் ஓட்டைப்பெற மட்டுமே அருந்ததியர் மக்களைப் பயன்படுத்தி வந்தபோது மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே உண்மையான அக்கறையுடன் போராடியது. குழுக்களாகப் போராடிக்கொண்டிருந்த எங்களை ஒரே அரங்கத்தில் அமர்த்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். 1989-ல் வன்னியர் சமூகம் 105 சாதிகளை ஒன்றுதிரட்டி 27 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காக போராடியது. ஆனால் அருந்ததியர் இடஒதுக்கீட்டை தலித் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பள்ளர், பறையர் அமைப்புகளே எதிர்ப்பதுதான் வேதனையானது.
ஆதித்தமிழர் விடுதலை முன்னணியின்
மாநில அமைப்பாளர் கோவை ரவிக்குமார்:
கடைநிலைச் சாதியினரை விடுவிப்பதே முதல்பணி என்று போராடிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவிக்கிறோம். கையால் மலம் அள்ளும் மனிதாபிமானமற்ற சமுதாயக் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஒரு மாமனிதர் விரும்பி னார். அதற்குத் தடைவிதித்த முதல் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாமனிதர் ஜோதிபாசு. அவருக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவிக்கிறோம். சிலநாட்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது, ஆண்டானுக்கு அடிமைகள் எடுத்த விழா. இந்த விழா தனது சகதோழனை தோளில் தட்டிப் பாராட்டுவது.
அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின்
மாநில அமைப்பாளர் கு.ஜக்கையன்:
உள்ஒதுக்கீடு அறிவித்தவுடன் தோழர் சம்பத்திடம் பாராட்டுவிழா நடத்துகிறோம் என்று அனுமதி கேட்டேன். அப்படி ஒரு விளம்பரம் தேடும் வேலை வேண்டாம் என்றார். ஆனால் தமிழக முதல்வர் தன்னிடம்தானே கோரிக்கை வைத்து நிறைவேற்றியதாகச் சொன்னார். எனவே உண்மையை ஊருக்குச் சொல்லவே இந்த விழா. சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பென்சன் வழங்கப்பட்டபோது என்.சங்கரய்யா, நல்லகண்ணு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாங்க மறுத்தனர். பென்சனுக்காகவா போராடினோம் என்று மார்தட்டிய பாரம்பரியத்தைக் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம். உள் இடஒதுக்கீடு கேட்டு நடந்த போராட்டத்தில் திண்டுக்கல் மறியலில் பங்கேற்று ஆளும் அரசுக்கு நெருக்கடி தந்தவர் தோழர் என்.வரதராஜன்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்களை ஆகர்ஷித்த பகத்சிங்கிடம் கடைசி ஆசை என்னவென்று கேட்டார் கள். அதற்கு பகத்சிங், “சிறையில் பணிபுரியும் பேபி என்னும் பெண்மணி கையால் இரண்டு துண்டு ரொட்டி வேண்டும்,” என்று கேட்டார். சிறை முழுவதும் தேடிவிட்டு அப்படி ஒரு பெண் இல்லை என்று தெரிவித்தனர். அதற்கு பகத்சிங் கூறினார்: “கைதிகளின் கழிவறைகளில் மலம் அள்ளும் பணி செய்கிறார் பேபி,” என்று. அவர் இந்நாட்டின் உண்மையான புரட்சித்தலைவர் ஆவார். காந்தி தனக்கு அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் துப்புரவுப்பணியாளனாகப் பிறக்க வேண்டும் என்று கூறினார். இதனை அம்பேத்கரிடம் சொன்னபோது, “அடுத்த பிறவியும் இருக்க வேண்டும், அப்போதும் அவர்கள் துப்புரவுப்பணியைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்று காந்தி விரும்புகிறாரோ?’’ என்னவோ என்றார். இன்று சிலர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்றனர். அது அவர்களால் முடியாது. முதுகுளத்தூர் கலவரத்தில் உண்மை நிலையை வெளியுலகிற்குச் சொன்ன தினகரன் எனும் செய்தியாளர் தேவர் சாதியைச் சேர்ந்தவர்தான். தலித் மக்களுக்காகப் போராடி வீழ்ந்த திருப்பூர் இடுவாயைச் சேர்ந்த சிபிஎம் தோழர் ரத்தினசாமி, கவுண்டர் சாதிதான். தலித் மக்களின் விடுதலை என்பது முற்போக்கு எண்ணம் கொண்ட ஜனநாயக முற்போக்கு எண்ணம் கொண்டோர் இணையும்போதுதான் சாத்தியப்படும்.
அருந்ததியர் மக்கள் முன்னேற்றக்கழக
மேற்கு மண்டலச் செயலாளர் ராதாமணி:
எதுவுமேயில்லை என்று ஒதுக்கப்பட்டோருக்கு உதவுவது மார்க்சிஸ்ட் கட்சிதான். சேரிகளை மாற்றாத திராவிடம்தான் இதுவரை ஆண்டு வருகிறது. எனவே சமூக அடிமைத்தனத்தை மாற்ற வேண்டும் என்று போராடி வரும் மார்க்சிஸ்ட் கட்சி யைப் பாராட்டுவதில் பேரானந்தப்படுகிறோம்.
தலித் விடுதலைக்கட்சியின் மாநிலப்
பொதுச்செயலாளர் செங்கோட்டையன்:
இன்றைக்கு துணை முதல்வர் வருகைக்காக கருமத்தம்பட்டி முதல் கோவை வரை போக்குவரத்தை நிறுத்தியுள்ளனர். அதனால் என்னால் சரியான நேரத்திற்கு வர இயலவில்லை. 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் பி.எஸ்.(பி.சம்பத்)போன்ற தோழர்கள் சேரி மக்களிடம் இறங்கிப்பணி செய்து வருகிறார்கள். அப்படிச் செய்த இடங்களில் எல்லாம் இன்று கம்யூனிஸ்டுகளுக்குப் பேராதரவு இருக்கிறது. சாதியத்தை வேரறுக்கும் சக்தி மார்க்சியத்திற்கே உண்டு. எனவே இடதுசாரிகளுடன் இணைந்து நின்று சமூகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்.
பாராட்டு விழாவில் மக்கள் முன்னேற்ற முன்னணி பொதுச்செயலாளர் பால்ராசு, தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் மக் கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.கிருஷ்ணன், அருந்ததியர் மனித உரிமை அமைப்பின் மாநில அமைப்பாளர் ஆர்.ஆர். கருப்புச்சாமி, வீர அருந்ததியர் பேரவை பொதுச்செயலாளர் ஓ.ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை முன்னணி நிறுவனர் என்.டி.ஆர். ஜெகஜீவன்ராம், ஜனநாயக மக்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.சென்னியப்பன், தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் வி.பி.பன்னீர்செல்வம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.
மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாராட்டுவிழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
வியாழன், 11 பிப்ரவரி, 2010
ஒன்றுபடுத்தியதும் வென்று காட்டியதும் மார்க்சிஸ்ட் கட்சிதான்! - அருந்ததியர் இயக்க தலைவர்கள் புகழாரம்
லேபிள்கள்:
அ.சு.பவுத்தன்,
கோவை இரவிக்குமார்,
செங்கோட்டையன்,
ராதாமணி,
ஜக்கையன்