வியாழன், 11 பிப்ரவரி, 2010

“அருந்ததியர் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடுதலையுடன் இணைந்ததே” - என்.வரதராஜன் பேச்சு

சமூகத்தின் அடித்தளத்தில் அடக்கப்பட்டிருக்கும் அருந்ததியர் மக்களின் விடுதலை என்பது உழைக்கும் மக்களின் விடு தலையோடு இணைந்ததே என கோவையில் அருந்ததிய அமைப்புகளின் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் என்.வரதராஜன் பேசினார்.

கோவை புதுசித்தாபுதூரில் ஞாயிறன்று (24.01.2010) நடைபெற்ற பாராட்டுவிழாக் கூட்டத்திற்கு வழக்கறிஞர் வெண்மணி தலைமை வகித் தார். விழாவில் ஏற்புரையாற்றிய என்.வரதராஜன் மேலும் பேசியதாவது:-

உலக சமுதாயத்தையே மாற்றும் ஆற்றல்மிக்க- மாமனிதர் மார்க்சின் அற்புதமான தத்துவத்தைக் கொண்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்ஸ் தனது தத்துவத்தை விளக்கும்போது ‘தந்தை, தாய் எனும் உரிமை பாராட்டி தனது குழந்தையைக் கூட சுரண்ட மார்க்சியம் அனுமதிக்காது’ என்றார். அதனடிப்படையில் நாம் சுரண்டலுக்கு எதிராக வீரம் செறிந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வோம்.

நமது கிராமப்புறங்கள் இன்று அழிந்து போன நந்தவனங்களாய் காட்சி தருகின்றன. வங்கிகளில் கடன் பெற முடியாததால் கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கிச் சீரழிகிறார்கள். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளுக்கு 4 சதவிகித வட்டியில் கடன் வழங்க சிபாரிசு செய்தார். ஆனால் ஆள்வோர் அதை அமலாக்கவில்லை.

“தலித் மக்களின் விடுதலை என்பது அருந்ததியரின் விடுதலையோடு இணைந்தது. இன்று கோவையில்கூட என்னைச் சந்தித்த அருந்ததிய இளைஞர்கள், தங்களுக்கு சலவை செய்யவும், முடிவெட்டவும் மறுக்கப்படுவதாக தெரிவித்தனர். “பெரியார் பிறந்த மண்ணில் இன்னும் தீண்டாமையோ, ஒடுக்குமுறைகளோ குறையவில்லையே. அதனைப் போக்க 5 முறை முதல்வர் ஆன கருணாநிதி ஏதேனும் செய்தாரா? கடுமையான கிளர்ச்சிகளுக்குப் பிறகு பாதாளச் சாக்கடை அடைப்பை நீக்க சென்னையில் மட்டும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையே 50 நகரங்களுக்கும் விரிவுபடுத்து, சுடுகாட்டில் பிணம் புதைக்கும், எரிக்கும் வேலைகளைச் செய்யும் மக்களை மயான உதவியாளராக்கி அரசு ஊழியராக அறிவித்திட வேண்டும்; கையால் மலம் அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளிவை, தரிசு நில விநியோகத்தினை அருந்ததிய மக்களுக்கு வழங்கு என்று அருந்ததிய அமைப்புகளை இணைத்துக்கொண்டு கடும் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் நடத்தும். நீண்ட நெடிய போராட்டங்களால் அமலான மூன்று சதவிகித உள்ஒதுக்கீடு கூட முழுமையாக அமலாகவில்லை அதனை உயர்நீதிமன்றம் சென்று போராடிப் பெறவேண்டிய நிலை உள்ளது.

தீண்டாமை- வன்கொடுமைக்கு தீயிடும் போராட்டத்தில் அருந்ததியர்கள் முதல் படியில் நிற்க வேண்டும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி துணைநிற்கும். நாம் ஒன்றிணைந்து வீறுகொண்டு முன்னேறுவோம். இவ்வாறு என்.வரதராஜன் பேசினார்.