வியாழன், 11 பிப்ரவரி, 2010

தீண்டாமை ஒழிப்பு முன்னணி தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்பு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தூத்துக்குடி மாவட்ட அமைப்புக் கூட்டம், தூத்துக்குடியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு முன்னணியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.ரசல் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். 70 பேர் கொண்ட அமைப்புக்குழு, கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இசக்கிமுத்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கழுகுமலை வேலாயுதபுரம் கிராமத்தில் இலவச டி.வி. மறுக்கப்பட்டுள்ள 13 அருந்ததியர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இலவச டி.வி. வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் தீண்டாமை நிலவும் கிராமங்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியம் காட்டும்பட்சத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் நடத்தும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில அமைப்பாளர் பி.சம்பத் பேசுகையில், இரட்டை டம்ளர், சலூன்களில் இரண்டுசேர், சலவையகத்தில் இரண்டு பீரோ, கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு, பொது மயானப் பாதை போன்ற பல பிரச்சனைகள் மாவட்டத்தில் நிலவும் நிலையில், அவற்றுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோம் என்றார்.