செவ்வாய், 12 ஜனவரி, 2010

தலித் தெருவுக்கு வராத தேர் : திமுக பிரமுகரைக் கண்டித்து மறியல்

மதுரை- மேலூர் சாலையில் உள்ள உத்தங்குடி அய்யப்பன் கோயில் மண்டல பூஜை சனிக்கிழமையன்று (26.12.09) நடைபெற்றது. இந்த பூஜையையொட்டி அனைத்துத் தெருக்களிலும் கோயில் தேர் உலா வந்தது. ஆனால் தலித் மக்கள் வசிக்கும் தெருவிற்குள் மட்டும் தேர் வரவில்லை.

இதனிடையே, கோயில் அலங்காரக் குடையைத் தலித் இளைஞர்கள் கையால் தொட்டார்கள் என்பதற் காக, தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இதில் தலித் கர்ப்பிணிப் பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

உத்தங்குடி ஊராட்சித் தலைவரான தனலட்சுமியின் கணவரும், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் மணிமாறன், அம்பிகாபதி ஆகியோரும் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டினர்.

இத்தாக்குதல் சம்பவத்தால் உத்தங்குடியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். காவல்துறையிடம் தலித் மக்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக ஊராட்சித் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் உள் ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி உத்தங்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிறன்று மறியல் போராட்டம் நடை பெற்றது.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநில நிர்வாகி செல்லப்பாண்டியன், தமிழர் தேசியப்பேரவை துணைத்தலைவர் ஆறுமுகம், உழவர் இயக்க மாவட்டத்தலைவர் மலைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் அளித்த உறுதிமொழியின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி பெண் லட்சுமி, வினோத்குமார், பி.கண்ணன், பிரதாப் ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம்.தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று விவரங்களை கேட்டறிந்தனர். போராட்டத்துக்கு துணை நிற்பதாக உறுதி கூறினர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்கவேண்டும் என வலியுறுத்தினர்.

சாதி, மத வேறுபாட்டுக்கு சந்தனம் பூசுவது யாராயினும் அவர்களை சட்டம் அனுமதிக்காது என கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி அறிக்கை விட்டார். ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே மதுரையில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பதும், தலித்துக்களின் புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கூட காவல்துறை மறுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.