செவ்வாய், 12 ஜனவரி, 2010

துறையூர் அருகே கொட்டையூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அநீதி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு டீ கடைகளில் இரட்டை கிளாஸ் முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், செருப்பு அணிந்து செல்வதற்கும், கோயிலுக்குள் நுழைவதற்கும் பல ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து 30.12.2009 அன்று கொட்டையூர் கிராமத்தில் ஆலய நுழைவோம் என்றும் இரட்டை டம்ளர் உள்ளிட்ட இழிவை அகற்றுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் செவ்வாயன்று துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் சுமூக தீர்வு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்கள், வாலிபர் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினருடன் அப்பகுதியில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். அதேபோல டீ கடைகளிலும் பொதுக் கிளாசில் டீ குடித்தனர்.

முன்னதாக நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தாசில்தார் நந்தகுமார், துறையூர் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் எம்.காசிராஜன், துறையூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சங்கிலிதுரை, எஸ்.மருதமுத்து, உப்பிலியபுரம் ஒன்றியச் செயலாளர் எஸ்.முத்துசரம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆனந்தன், மாவட்டத் தலைவர் எ.சசிகுமார் மற்றும் முத்துகுமார், அசோக், சுரேஷ், அழகுமலை, பாக்கியராஜ், சக்திவேல், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சந்திரன் உள்பட ஏராளமான கொட்டையூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.