திங்கள், 18 ஜனவரி, 2010

தலித் மக்களின் கோயில்களை அபகரிக்க முயற்சி

அறந்தாங்கி ஒன்றியத்திலுள்ள ஆயிங்குடி - வல்லவாரியில் மொத்தம் 9 கோயில்கள் உள்ளன. இதில் 7 கோயில்களை ஆதிக்க சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மீதமுள்ள ஸ்ரீஅய்யனார் கோயில், ஸ்ரீகருத்தப்பெரியான் மற்றும் பரிவார தேவதைகள் அடங்கிய 2 கோயில்கள், பரம்பரை பரம் பரையாக அவ்வூரில் உள்ள தலித்துகளால் நிர்வகிக்கப்பட்டு வருவதாகும். இவை தவிர மற்ற 7 கோயில் களிலும் தலித்துகளுக்கு இதுநாள்வரை ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது.

தலித்துகள் வசமுள்ள இரண்டு கோயில்களில், நிர்வாகம், பூசாரி, சாமியாடிகள் அனைத்திலும் தலித்துகளே இருந்து வருகின்றனர். இவ்விரண்டு கோயில்களும் சக்திவாய்ந்த தெய்வங்களாக அப்பகுதி மக்களால் கருதப்படுவதால் பக்தர்களின் வருகையும், காணிக்கைகளும் கணிசமான அளவில் கூடிக் கொண்டே வந்துள்ளது. குறிப்பாக மற்ற சாதி மக்களும் இக்கோயில்களுக்கு வருகை புரிந்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

இது அப்பகுதி சாதி இந்துக்களின் கண்களை உறுத்த ஆரம்பிக்கவே, திடீரென ஒரு நாள் ஆதிக்க சக்தியைச் சேர்ந்த சிலர் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, பூஜை வேலைகளைச் செய்ய ஆரம்பித் துள்ளனர். பல்வேறு பகுதிகளிலிருந்து நேர்த்திக்கடனாக கொண்டு வரப்பட்ட 18 கிடாய்களில் 15 கிடாய் களை அபகரித்து கொண்டும் சென்றுள்ளனர். தற்போது தலித்துகளின் கோயில்களை பூட்டி சாவிகளையும் ஆதிக்க சாதியினர் தங்கள் கைவசம் வைத்துக் கொண்டு, தலித்துகளை தடுத்து வருகின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தலித் மக்கள் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை 21.12.2009 அன்று சந்தித்து, நாங்கள் நிர்வகித்து வந்த எங்கள் பரம்பரைக் கோவிலை எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என மனுக்கொடுத்து முறையிட்டுள்ளனர். மனுக் கொடுத்ததை அறிந்த ஆதிக்க சாதியினர் தலித்துகளான பெரியய்யா மகன் சுப்பிரமணியன்(60), பெரியண்ணன் மகன் கருப்பையா(47) ஆகிய இருவரையும் மறித்து தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியபடி செருப்பால் அடித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றாலும், அதிகாரிகளும், காவல்துறையினரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருந்தனர். மிகவும் வறிய நிலையில் இருக்கும் தலித்துகளை சாதி ஆதிக்கத்துடனும் பணபலத்துடனும் இருக்கும் ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் தரப்பிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்; செருப்பால் அடித்து துன்புறுத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; தலித்துகள் வசமிருந்த கோயில்களின் நிர்வாகம், பூசாரி, சாமியாடி உரிமைகளை அவர்களே தடை யின்றித் தொடர உத்தரவாதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் மீதமுள்ள 7 கோயில்களிலும் ஆலயத்திற்குள் நுழைந்து வழிபடும் உரிமையை தலித்துகளுக்கும் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை அறிக்கையில் வலியுறுத்தினார்.