திங்கள், 18 ஜனவரி, 2010

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் : தாக்கப்பட்டவர்கள் மீதே பொய்வழக்கு போட்ட பட்டுக்கோட்டை காவல்துறை

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, மதுரபாஷானியபுரம் கிராமம். இங்கு தலித் பகுதியில், 31.12.2009 நள்ளிரவு 12 மணியளவில் தலித் இளைஞர்களான அ.ராஜேஷ், பொ.மோகன் ஆகியோர் அமர்ந்து இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த, ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காடந்தங் குடி கிராமத்தைச் சேர்ந்த- ஆதிக்க சாதியைச் சேர்ந்த ந.ஜவஹர், வேதமுத்து, குகன் ஆகிய மூவரும், “என் னங்கடா, எழுந்திரிக்காமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என்று கூறி, சாதியை சொல்லி இழிவாகப் பேசியதுடன், ராஜேஷ், மோகன் ஆகிய இருவரையும் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த ராஜேஷ், மோகன் ஆகியோர் பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி. மருத்துவமனைக்கு சென்று தலித் இளைஞர்கள் ராஜேஷையும், மோகனையும், புகாரை திரும்பப் பெறுமாறு சொன்னதுடன், இல்லையேல் உங்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார். அத்துடன், ஆதிக்க சாதியினர் மீதான புகாரை பதிவு செய்யாமல் காலம் கடத்தியுள்ளார்.

இதுபற்றி ஜனவரி 2-ம் தேதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதன் பிறகும் கூட நடவடிக்கை இல்லை. மாறாக தாக்குதலுக்குள்ளான ராஜேஷ், மோகன் ஆகியோர் மீதே 307 மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜவகர், வேதமுத்து, குகன் ஆகியோரை, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யாததுடன், மாறாக அவர்கள் மீதே வழக்கு போட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தனது அறிக்கையில் கண்டித்தார்.

தலித் இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்க வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் மீதே பொய் வழக்கு போட்ட பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதே போல தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் சின்னை.பாண்டியனும், கண்டனம் தெரிவித்தார்.

பட்டுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜேஷ், மோகன் ஆகியோரை, சின்னை.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாம்பசிவம் ஆகியோர் மருத்துவமனையில் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். அதன்பிறகு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்வேலனிடம் சம்பவத்தை நேரில் விளக்கி மனுவும் அளித்தனர்.