திங்கள், 18 ஜனவரி, 2010

தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டம் : திருப்பூர் கூட்டத்தில் முடிவு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்புக்குழு கூட்டம் 2.1.2010 சனிக்கிழமையன்று திருப்பூரில் கு.ஜக்கையன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிப் புலிகள், அருந்தமிழர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, களம் ஆகிய தலித் அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் உள்ள சிஐடியு, தமுஎகச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் மத்தியதர அரங்கங்கள் ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில அமைப்பாளர் பி.சம்பத் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்டங்களையும், தலையீடுகளையும் விளக்கினார். கே.சாமுவேல்ராஜ் தீர்மானங்களை முன்மொழிந்தார். எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ நிறைவுரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அருந்ததியர் உள்ஒதுக்கீடு
அருந்ததியர் மக்களின் 3 சதவீத உள்ஒதுக்கீடு கல்வித்துறையில் மட்டும் அமலாகிறது. தமிழக அரசின் வேலைவாய்ப்பை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர், மின்வாரியப் பணி ஆகியவற்றில் உள்ஒதுக்கீடு அமலாகவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சில மாவட்டங்களில் உள் ஒதுக்கீடு அடிப்படையில் பதிவு செய்ய மறுப்பதையும், பல மாவட்டங்களில் அருந்ததியர் என சான்றிதழ் தர மறுப்பதையும் கண்டித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியும் கோவை, திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நெல்லை, தருமபுரி ஆகிய 7 மையங்களில் வேலை வாய்ப்பு அலுவலகம் முன்பும், ஈரோட்டில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன்பும் பிப்ரவரி 15-ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலமீட்பு போராட்டம்
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் சட்ட விரோதமான நிலப்பதிவுகள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சமி நிலத்தை மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தலித் மக்கள் உட்பட விவசாயத் தொழிலாளர்களுக்கு உடன டியாக 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரி பிப்ரவரி 20 அன்று செங்கல்பட்டில் நில மீட்பு மாநாடு நடைபெறும்.

விழுப்புரத்தில் வாழ்வுரிமை மாநாடு
தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் என அறிவிக்க வேண்டும் என்கிற நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைகளை அமலாக்கிட வேண்டும் எனக் கோரி ஜனவரி 25- திருச்சியில் பெருந்திரள் கண்டன இயக்கமும், மார்ச் 20- விழுப்புரத்தில் தலித் கிறிஸ்தவர்கள் வாழ்வுரிமை மாநாடும் நடைபெறும்.

சென்னையில் கருத்தரங்கம்
தமிழகத்தில் தலித் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டை 18 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயர்த்திடக் கோரியும், பின்னடைவுப் பணியிடங்கள், காலியிடங்களை நிரப்பிடக் கோரியும் பிப்ரவரியில் சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் நடை பெறும்.

மதுரையில் பேரணி
தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திடக் கோரியும், அவர்களின் வாழ்விடங்களில் குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலை, கழிப்பிடம், பொது விநியோகம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரியும் மார்ச் மாதத்தில் மதுரையில் பேரணி நடைபெறும்.

ஒண்டிவீரனுக்கு நினைவுச் சின்னம்
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபமும், சிலையும் அமைத்திடக்கோரி மார்ச் மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விளக்கப் பிரச்சாரம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உறுதியான முறையில் அமலாக்கிடக் கோரியும், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சரத்துக்களை மக்கள் மத்தியில் பிரச் சாரம் செய்திடவும் சிறு பிரசுரம் வெளியிடுவது என்றும், அதை ஜன வரி இறுதி வாரத்தில் மக்களிடம் கொண்டு செல்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இன்சூரன்ஸ் தொழிற்சங்க அமைப்பும் இணைந்து கோவையில் டாக்டர் அம்பேத்கார் கல்வி - வேலைவாய்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளின் உதவியோடு சென்னை, திருப்பூர், ஈரோடு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் மார்ச் இறுதிக்குள் அமைப்பது.

சட்ட உதவி மையம்
தலித் மக்களின் சட்ட ரீதியான உரிமைகளைப் பாதுகாத்திடவும், அதற்காக போராடவும் சென்னை, மதுரையில் சட்ட உதவி மையம் அமைப்பது.

காவல்துறைக்கு கண்டனம்
காங்கியனூரில் ஆலய நுழைவு உரிமை கேட்டு போராடிய மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மீதும், தலித் மக்கள் மீதும் கடுமையான தடியடி நடத்தி பொய் வழக்கு தொடுத்துள்ள மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், பொய் வழக்குகளை வாபஸ் பெறவும் வேண்டும்; ஆதம்பாக்கம் திருவள்ளூர் நடுநிலைப்பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்; ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கிட வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.