செவ்வாய், 22 டிசம்பர், 2009

நகராட்சி நிர்வாகத்தின் சாதிய மனோபாவம்

அருப்புக்கோட்டை நகராட்சியில், காலியாக இருந்த 17 துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்கள் அண்மையில் நிரப்பப்பட்டன.

இதில், 13 பேர் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஏனைய 4 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், அருந்ததியர்கள் 13 பேரை மட்டும் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தும் நகராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 4 பேரை மட்டும் துப்புரவுப் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த சாதிய மனோபாவத்திற்கு கடும் கண்டனம் எழுந்தது.

இதுகுறித்து சிஐடியு சார்பில் நகராட்சி ஆணையாளருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது.

துப்புரவுப் பணிக்கென தேர்வு செய்தவர்களில் சிலரை மட்டும் வேறு வேலை செய்ய சொல்வது சாதிய கண்ணோட்டத்துடனான அணுகுமுறையாகும். இதுவும் தீண்டாமையின் ஒரு வடிவமே. அருந்ததியர் சமூகத்தை சார்ந்த துப்புரவு பணியாளர்களை மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துச் செய்திட நிர்ப்பந்தம் செய்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இங்கு நடைபெற் றுள்ளன. இனியும் தொடரும் பட்சத்தில் சிஐடியு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று சிஐடியு தனது புகாரில் கூறியது. (16.12.09)