செவ்வாய், 8 டிசம்பர், 2009

வாச்சாத்தி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

தருமபுரி அமர்வு நீதி மன்றத்தில் நடந்துவரும் வாச்சாத்தி வழக்கு டிசம்பர் 23-ம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் வாச்சாத்தி கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு மலைவாழ் மக்களை சார்ந்த 18 பெண்கள் வனத்துறையை சேர்ந்தவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதுதொடர்பாக வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் 269 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 16 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் கடந்த ஜுன் மாதம் தருமபுரி அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 20,21 அன்று மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு தலைமையில் நடைபெற்ற குறுக்கு விசாரணையில், வனத்துறையினரால் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் முதல் நாள் ஜெயா, சித்திரா, அமுதா, காந்தி, லட்சுமி ஆகிய ஐந்து பேரும் இரண்டாம் நாள் முத்துவேடி, பாப்பாத்தி, மல்லிகா மாரிக்கண்ணு ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினர்.

நவம்பர் 13 அன்று நடை பெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட 18 பெண்களில் மீதமுள்ள செல்வி, தேன்மொழி, காந்திமதி உள்ளிட்ட ஒன்பது பேரும் தங்களுக்கு நேர்ந்த கொடு மைகளை நீதிபதியிடம் கூறினர். பின்னர் இவ்வழக்கு நவம்பர் 30 அன்று நடைபெறுவதாக இருந்தது. சிறை வார்டன் லதாபாய் சாட்சியமளிக்க வந்திருந்தார். ஆனால், மாவட்ட நீதிபதி எஸ். குமரகுரு விடுப்பு என்பதால், டிசம்பர் 23 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.