சனி, 12 டிசம்பர், 2009

இருப்பதைப் பறிக்கும் மத்திய பணியாளர் தேர்வாணையம் - யு.கே.சிவஞானம்

“ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். உள்ளிட்ட மிக உயரிய அரசுப்பணிகளுக்கான தேர்வுகளில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை, யு.பி.எஸ்.சி. ஒப்புக் கொள்கிறது. தற்போதுள்ள துவக்கக்கட்டத் தேர்வுக்குப் பதிலாக செயல்திறன் தேர்வைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்; அதேபோல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின்(யு.பி.எஸ்.சி) தலைவர் டி.பி.அகர்வால்தான்.

1990களின் பிற்பகுதி மற்றும் இந்த நூற் றாண்டின் துவக்கப்பகுதி ஆகியவை, டாலர் கனவுகளோடு படிப்புகளை முடித்தவர்களின் காலமாக இருந்தது. அண்மையில் ஏற்பட்டுள்ள அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி மற்றும் அந்த நெருக்கடியின் அடுத்த பரிமாணமான சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றால் மீண்டும் அரசு, பொதுத்துறை மற்றும் வங்கி வேலைகள் பக்கம் பலரின் கண்களும் பதிந்துள்ளன. அதில் கணிசமானவர்கள் “கலெக்டர் ஆகப்போறோம்” என்ற எண்ணத்தையும் மனதில் ஏற்றிக் கொண்டவர்களாக உள்ளனர்.

நாட்டின் உயர்பதவிகளை வகிக்கப்போகும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைத் தேர்வு செய்யப்போகும் தேர்வு முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏற்கெனவே அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறைகளை மேலும் செழுமைப்படுத்த வேண்டும் என்பதுதான் பல வல்லுநர்களின் கருத்துமாகும். ஆனால் அகர்வால் அளித்துள்ள பரிந்துரைகள், இருப்பதையும் பறித்துக் கொண்டுவிடுவது போன்றுதான் உள்ளது. இந்தக் கருத்துக்கள் ஏதோ போகிற போக்கில் தெரிவிக்கப்பட்டவை அல்ல. குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் பங்கேற்ற கூட்டமொன்றில் அவர் முன்னிலையிலேயே வைக்கப்பட்டவைதான்.

தற்போதைய தேர்வுமுறையில் துவக்கக் கட்டத் தேர்வில் பொதுப்பாடம்(ஜெனரல் ஸ்ட டிஸ்) மற்றும் விருப்பப்பாடம் ஆகிய இரண்டு தாள்கள் உள்ளன. இதில் முதல்தாள் அனை வருக்கும் பொதுவானதாகவும், இரண்டாவதாக, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அளித்துள்ள பட்டியலிலிருந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தை தேர்வு எழுதுபவர்கள் தேர்வு செய்து கொள்ளும் வகையிலும் தற்போதைய முறை உள்ளது. புதிதாகக் கொண்டுவர வேண்டும் என்று அகர்வால் போன்றவர்கள் விரும்புவது கிட்டத்தட்ட வங்கித் தேர்வுகளைப் போன்ற முறையைத்தான். வங்கிப் பணியின் தன்மைக்கு வேண்டுமானால் செயல்திறன் தேர்வு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பன்முகத்தன்மை கொண்ட சிவில் சர்வீஸ் தேர்வுக்கு புதிய பரிந்துரைகளைவிட தற்போதுள்ள முறையே நல்லது. இவர்கள் கூறும் செயல்திறன் வினாக்கள் பொதுப்பாடத்தில் கேட்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய முறை இருப்பதால் பொறியியல், மருத்துவம், விவசாயம் ஆகிய தொழில் சார்ந்த படிப்புகள் படித்தவர்களோடு அறிவியல், கலை, இலக்கியம் ஆகிய பாடங்களைப் படித்தவர்களும் தங்களுக்குப் பிடித்த பாடத்தைத் தேர்வு செய்துகொள்ள முடிகிறது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்யத் தயங்காத நிலையை இது உருவாக்கியுள்ளது. அண்மைக்காலங்களில் இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இதை உறுதிப்படுத்துகிறது.

தேர்வாணையத் தலைவர் அகர்வால் சொல்லும் செயல்திறன் தேர்வு என்பது ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம் ஆகிய படிப்புகளுக்கு செல்பவர்களுக்காக நடத்தப்படுவதாகும். அத்தகைய தேர்வுகளில் நகர்ப்புறத்தைச் சேர்ந்த பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. இதே தேர்வு முறையை சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் கொண்டு வந்தால், குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே அது பலனைத் தருவதாக அமைந்து விடும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சி நடைபெற்றது. கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதால் இதைக் கைவிட நேர்ந்தது என்பது கடந்தகால அனுபவம்.

இது ஒருபுறம். மறுபுறத்தில் வாய்ப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அகர்வால் பரிந்துரைக்கிறார். அவர் பேசியது நவம்பர் 14 அன்று. இதன் பின்னணியை ஆய்வது இங்கு பொருத்தமாக இருக்கும். பொதுப்பிரிவினருக்கு நான்கு வாய்ப்புகளும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஏழு வாய்ப்புகளும், தலித் மற்றும் பழங்குடியினருக்கு வாய்ப்புகளுக்கான வரம்பு இல்லாமலும் தற்போது உள்ளது. வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்று இவர் யாரைக் குறி வைக்கிறார் என்பதை சொல்ல வேண்டியதே இல்லை. நிச்சயமாக சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைக் குறிவைத்தே இவரது பேச்சு இருக்கிறது.

தலித்துகள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் இந்த சலுகைகளை நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் கதவுகளை ஆதித்ய குமார் என்பவர் தட்டினார். அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் சிரியாக் ஜோசப் ஆகியோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல் சாசனப்படி கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இச்சலுகைகள் அரசியல் சட்டப்பிரிவு 16(4)ன்படி சரியானதுதான்.

இட ஒதுக்கீடு என்பது சட்டரீதியாக வழங்கப்பட்டுவிட்டாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் இன்னும் ஏராளமான முட்டுக் கட்டைகளை ஒடுக்கப்பட்ட மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் இருப்பதையும் பறித்துவிட்டு “சமமான” நிலையை உருவாக்கப்போகிறோம் என்று அகர்வால் போன்ற பெருங்குடிமகன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சமூகநீதிப் பாதையில் இதுபோன்ற பெரும் தடைகளை நாடு சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்கள் எழும்பாமல் வாய்க்குள்ளேயே அடங்கி விடும் என்று இவர்கள் நினைத்தால் ஏமாந்தே போவார்கள். (தீக்கதிர், 5.12.09)

(கட்டுரையாளர், மாவட்ட அமைப்பாளர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கோவை)