சனி, 12 டிசம்பர், 2009

தீண்டாமை ஒழிப்பும் ஜனநாயகப் புரட்சியும்! - பி. சம்பத்


டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் தலைசிறந்த சமூக நீதிப் போராளி. புரட்சிகரமான சிந்தனையாளர். இந்துத்துவா கோட்பாடுகளைத் தோலுரித்துக் காட்டியவர். சாதியமைப்பு ஒழிய சீற்றத்துடன் போராடியவர். தீண்டாமை ஒழியவும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றிடவும் எழுச்சி மிக்க போராட் டங்களை நடத்தியவர். இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சாதியடிமைத்தனத்திற்கு எதிராகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் அவர் நடத்திய போராட்டமும், வெளிப்படுத்திய கருத்துகளும் இந்திய மக்கள் மத்தியிலும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. இதனால் தான், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கும் தலைமைப் பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டபோது தேசமே அதனை அங்கீகரித்தது. இந்தியாவின் சட்ட அமைச்சராகவும் அவர் திறம்பட செயல்பட்டார்.

இந்தியச் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மத்தியில் அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் ஆழமான கிளர்ச்சி உணர்வுகளை ஏற்படுத்தின. இன்றளவும் ஏற்படுத்தி வருகின்றன. எல்லா சமூக நீதிக்கான அமைப்புகளும் ஜனநாயக இயக்கங்களும் மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் ஏகோபித்த முறையில் அம்பேத்கரை உயர்த்திப் பிடிப்பதை இன்றளவும் காண முடிகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற பல துறைகளிலும் ஏராளமான நூல்களைக் கற்றிருந்த மேதையாக அவர் விளங்கினாலும் அடித்தட்டு மக்களின் குறிப்பாக தலித் மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து ஆவேசமான அக்கறையுடன் செயல்பட்டார். தனது பணிகள் பற்றி அம்பேத்கர் அவர்களே குறிப்பிடுவதாவது;

“உலகிலுள்ள அடிமைச் சமூகங்கள் அனைத்துக்கும் நானே தலைவர் என்று கூறவில்லை. தீர்க்கப்பட வேண்டிய வேறு பல பிரச்சனைகள் கொடுமைகள் நம் நாட்டில் இல்லையென்றும் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவுக்குப் பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்”.

இந்தியாவில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் இந்து மதமும் இந்துத்துவா கோட்பாடுகளும் சித்தாந்த அஸ்திவாரமாக விளங்குவதைக் கண்ட அம்பேத்கர் அவற்றைக் கடுமையாகச் சாடினார். பெண் அடிமைத்தனத்தையும், சாதிய அடிமைத்தனத்தையும் வலியுறுத்தும் புராணங்களும், இதிகாசங்களும் கட்டுக்கதைகள் என்றார். மனுநீதியை உருவாக்கிய மனு மட்டும் தன் கைகளில் கிடைத்திருந்தால் அவனை அப்படியே கடித்துக் குதறியிருப் பேன் என அதன் மீதான தன் வெஞ்சினத்தை வெளிப்படுத்தினார். இத்தகைய கருத்துப் பிரச்சாரம் மட்டுமல்லாமல் தலித் மக்களை அணி திரட்டி ஆலய நுழைவு, பொதுக் குளங்களில் குளிக்க வைப்பது உள்பட தீவிரமான தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களையும் நடத்தினார். இதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் அவர் உத்வேகமூட்டும் ஆவேசமான சக்தியாக மாறினார்.

டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் தலைமைப் பொறுப்பை உணர்வுப்பூர்வமாக ஏற்றார். அரசியல் சாசனத்தின் மூலம் தீண்டாமை ஒழிப்பையும் சாதிய ஒடுக்குமுறைகளையும் முடிவுக்கும் கொண்டு வர முடியும் என நம்பினார். 1950இல் இந்திய அரசியல் சாசனத்தை முன்மொழியும் போது தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக கம்பீரமாக அறிவித்தார். அதனை மீறி யாரேனும் தீண்டாமையைக் கடைப்பிடித் தால் அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கும் சட்டங்களும் கொண்டு வரப்பட் டன. ஆனால் அந்தோ! அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அம்பேத்கர் தனது வாழ்நாளில் இறுதி நாட்களில் இதற்காக தனது மனவேதனையை வெளிப்படுத்தினார். தீண்டாமை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டு விட்டதாகக் கூறியதற்காக தான் வருந்துவதாகவும், தலித் மக்கள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் எழுச்சிமிக்க போராட்டங்கள் மூலமே அது சாத்தியமாகும் என உறுதிபட அறிவித்தார்.

சாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது இந்தியாவில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக இயக்கங்களின் மிகப் பிரதானமான கடமையாகும். இந்திய ஜனநாயகப் புரட்சியின் பிரிக்க முடியாத அம்சமாகவும் இது விளங்குகிறது. டாக்டர் அம்பேத்கர் தன் வாழ்நாள் முழுவதும் இதற்காக கடுமையாகப் போராடினார். ஆனால் இக்கடமைகளை நிறைவேற்ற நிலப்பிரபுத்துவ ஒழிப்பும், நில விநியோகமும் பிரதான தேவையாக உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி. ரணதிவே கூறுவதாவது;

“தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடிய புகழ் பெற்ற பெரும் வீரர் அம்பேத்கர். ஆரம்பக் காலத்தில் உயர் சாதியினரின் கபடத்தனங்களை அம்பலப்படுத்திக் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கினார். அதற்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலமும், தனி குடியிருப்புகளும் கோரினார். இதை ஒரு விவசாயப் புரட்சியின்றி, ஜனநாயகப் புரட்சியின்றி சாதிக்க முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் கொடுப்பதன் மூலம் அவர்கள் பண் ணையடிமைகளாக மற்ற சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையைத் தவிர்க்கலாம்.”.

இப்புரிதலோடு தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு போராட்டங்களை முன் எடுத்துச் செல்வோம்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கமும், இடதுசாரி இயக்கங்களும் தேச விடுதலைக்காக மட்டும் அல்ல. இந்திய ஆளும் வர்க்கங்களின் வர்க்கச் சுரண்டலை ஒழிக்கவும், தலித் - பழங்குடி மக்களின் சமூக விடுதலைக்காகவும் எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியுள்ளன. இடதுசாரி இயக்கங்கள் இன்று வலுவானதாக உள்ள மேற்குவங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நிலங்களில் சாதிய மோதல்களோ, ஒடுக்குமுறைகளோ இல்லை என்பதைக் கண்கூடாக காண முடியும். குறிப்பாக மேற்குவங்க மாநி லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி இயக்கங்களும் நடத்திய போராட்டங்களாலும், இடதுசாரி அரசின் சாதனையாலும் 19 லட்சம் பேருக்கு 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் 12 லட்சம் பேர் தலித்துகள் மற்றும் பழங்குடியினர்கள் ஆவர். இவ்விருவரும் சேர்ந்து மாநில மக்கள் தொகையில் 27 சதவிகிதமாக இருந்த போதிலும், அதைவிட மிகக் கணிசமான சதவிகிதத்தில் தலித் மக்கள் நிலம் பெற்றிருப்பதை காண முடியும். இம்மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீது எவ்வித வன்கொடுமைத் தாக்குதலும் நடைபெறவில்லை என இந்திய அரசின் தலித் பழங்குடியினர் நல்வாழ்விற்கான ஆணையரே கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய நாகை, திருவாரூர்) கிராமப்புற கணிசமான தலித் விவசாயத் தொழிலாளர்களுக்கு இதர மாவட்டங்களை விட அதிகமான கூலியும், இதோடு இழிவான பல தீண்டாமை வடிவங்கள் ஒழிக்கப்பட்டதும் நம் முன் உள்ள சாட்சிய மாகும். சமீப காலங்களில் தொடர்ச்சியான பல தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தி அதில் வெற்றி பெற்று வருகிறோம். (பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உத்தப்புரம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு, பல கிராமங்களில் ஆலய நுழைவு, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்கள்)

தலித் - பழங்குடி மக்களில் மிக மிகக் கணிசமானவர்கள் ஏழை உழைப்பாளிகள். இந்திய பாட்டாளி வர்க்கத்தின் பிரிக்க முடியாத பகுதியினர். இப்பார்வையோடு இம்மக்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பணிகளையும் போராட்டங்களையும் மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்த தோழர் பிரபாகர் சான்ஸ்கிரி, பின்வருமாறு பிரகடனப்படுத்துகிறார்.

“...சாதிய முறைக்கான பொருளாதார அடிப்படை கரைந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்தச் சாதிய முறையானது சமூக மேல்கட்டுமானத்தை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண் டுள்ளது. அங்கே அது, சுரண்டும் வர்க்கங்களாலும் அவற்றின் அரசியல் அமைப்பாளர்களாலும் பேணிக் காக்கப்படுகின்றது. ராஜாராம் மோகன்ராய் போன்றவர்களால் துவக்கப்பட்டு ஜோதிபாபூலே மற்றும் அம்பேத்காரால் சாதிய முறையை ஒழித்துக் கட்டுவது என்ற எழுச்சிகர உள்ளடக்கம் கொடுக்கப்பட்டுள்ள சமூகச் சீர்த்திருத்த இயக்கமானது, மக்கள் ஜனநாயகப் புரட்சியின் பகுதி என்ற முறையில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கடமைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.”

இப்பார்வையில் சமூகச் சீர்திருத்த இயக்கங்களையும் குறிப்பாக தீண்டாமை ஒழிப்பையும் வலுவாக முன்னெடுத்துச் செல்வோம்.     (5.12.09)

(கட்டுரையாளர்: அமைப்பாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,
மாநிலச் செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்).